டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், அதையே ஆயுதமாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’, ‘ஆன்லைன் விசாரணை’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மூத்த குடிமக்களை மனதளவில் மிரட்டி, அவர்கள் வாழ்நாள் சேமிப்பை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. மும்பையில் நடந்த சமீபத்திய ஒரு சம்பவம், இந்த மோசடிகள் எந்த அளவுக்கு திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த முறை, சைபர் குற்றவாளிகள் முன்னாள் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரையே பயன்படுத்தி, ஒரு மூதாட்டியிடமிருந்து சுமார் 3 கோடியே 71 லட்சம் ரூபாயை மோசடியாகப் பறித்துள்ளனர். காவல்துறை மற்றும் சிபிஐ விசாரணை என்ற பெயரில் நடந்த இந்த நாடகத்தில், அந்தப் பெண் பல வாரங்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு, மனதளவில் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு தொலைபேசி அழைப்பில் தொடங்கிய பயம் மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் கடந்த 26 ஆண்டுகளாக வசித்து வரும் அந்த மூதாட்டிக்கு, கடந்த ஆகஸ்ட் 18 அன்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. “உங்கள் அழைப்பை கொலாபா காவல் நிலையத்துடன் இணைக்கிறேன்” என்று கூறிய அந்த நபர், அழைப்பைத் துண்டித்துள்ளார். சில நிமிடங்களில், அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை காவல் நிலைய அதிகாரி என்று அறிமுகப்படுத்தி, “உங்கள் ஆதார் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அது சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார். இந்த தகவலைக் கேட்ட அந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். தனக்கு அப்படி எந்தக் கணக்கும் இல்லை என்றும், தான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் அவர் விளக்கம் அளிக்க முயன்றுள்ளார். கைது மிரட்டலும் போலி ஆவணங்களும் அவரின் விளக்கத்தை கேட்காமல், மோசடி நபர்கள் “இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உங்கள் பெயரும் அதில் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கைது செய்யப்படலாம்” என்று மிரட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பான போலி கடிதங்களையும், சட்ட ஆவணங்களைப் போல வடிவமைக்கப்பட்ட சில பதிவுகளையும் அவருக்கு அனுப்பியுள்ளனர். “நாங்கள் விசாரணை நடத்துகிறோம். எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கைது செய்வோம்” என்று அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தை யாரிடமும் சொன்னால், அவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக, அந்த மூதாட்டி கடும் பயத்தில் ஆழ்ந்துள்ளார். தனது வங்கிக் கணக்குகள், முதலீடுகள், வீட்டுத் தகவல்கள் என அனைத்தையும் அவர்களிடம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார். ‘ஆன்லைன் நீதிமன்றம்’ என்ற நாடகம் ஒரு கட்டத்தில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும், 24 மணிநேரமும் அவர்களது கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். விசாரணை நடத்தும் அதிகாரியின் பெயர் எஸ்.கே. ஜெயஸ்வால் என்றும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், அந்தப் பெண்ணிடம் அவரது வாழ்க்கையைப் பற்றி 2 முதல் 3 பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதச் சொல்லியுள்ளனர். “இது உங்கள் நிரபராதத்தை நிரூபிக்க உதவும்” என்று கூறி, அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளனர். பின்னர் நடந்தது இன்னும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வீடியோ காலில் வந்த ஒருவர், தன்னை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்கள் வழக்கு தீவிரமானது. ஆனால் நீங்கள் நிரபராதி” என்று கூறி, அவரது முதலீட்டு ஆவணங்களை கேட்டுள்ளார். அந்தப் பெண், இது உண்மையான நீதிமன்ற விசாரணை என்றே நம்பியுள்ளார். கணக்குகளை காலி செய்யச் செய்த திட்டம் சிறிது நேரத்தில், “உங்கள் கணக்கில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது” என்று கூறி, விசாரணையின் ஒரு பகுதியாக அவரது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பணமாக்கச் சொன்னுள்ளனர். பின்னர், அந்த தொகையில் 90 முதல் 95 சதவீதத்தை அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு தற்காலிகமாக மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். கைது பயத்தில் இருந்த அந்த மூதாட்டி, அவர்கள் சொன்னபடி பணத்தை அனுப்பியுள்ளார். இதற்குப் பிறகு, தொடர்ந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு மிரட்டல்கள் வந்துள்ளன. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடந்த இந்த மோசடியில், மொத்தமாக 3 கோடியே 71 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைச் சொல்லி காலம் கடத்தினர். இதன் பின்னர்தான் தான் மோசடியில் சிக்கியிருப்பதை அந்தப் பெண் உணர்ந்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் – வெளிவந்த உண்மை அக்டோபர் 13 அன்று, அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாட்ஸ்ஆப் உரையாடல்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், ஸ்கிரீன் ஷாட்கள் ஆகியவற்றை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல்துறையோ, சிபிஐயோ ஒருபோதும் வாட்ஸ்ஆப், வீடியோ கால் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக விசாரணை நடத்துவதில்லை. கைது செய்வதாக மிரட்டுவதும் இல்லை. அப்படிப்பட்ட அழைப்புகள் வந்தால், எந்தத் தகவலையும் பகிராமல் உடனே அந்த எண்ணைத் துண்டித்து, பிளாக் செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளின் புகைப்படங்கள், நீதிமன்ற பின்னணி போன்றவை காண்பிக்கப்பட்டாலும், அதனால் நம்ப வேண்டாம். இது ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம். சைபர் மோசடியில் சிக்கினால், உடனடியாக அரசு நடத்தும் சைபர் குற்ற புகார் தளத்தில் அல்லது உள்ளூர் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். தாமதமின்றி புகார் அளித்தால், பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் நடந்த ஒரு காவல் சித்ரவதை சம்பவம், ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. கால் நூற்றாண்டுக்கு முன்பு காவல் நிலையத்தில் நடந்த அந்த கொடூரம், இன்றும் அந்த வீட்டில் காயமாகவே இருக்கிறது. கணவரை காவல் மரணத்தில் இழந்த ஒரு பெண், 27 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடி வருகிறார். அந்தப் போராட்டத்தில், ஒருகாலத்தில் பள்ளி மாணவராக இருந்த அவரது மகன், இன்று வழக்கறிஞராக தாயின் பக்கத்தில் நிற்கிறார். வயலிலிருந்து காவல் நிலையம் வரை இழுத்துச் செல்லப்பட்ட வாழ்க்கை 1998 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி. காலை நேரம். உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தில், அந்தப் பெண் மற்ற பெண்களுடன் சேர்ந்து வயலில் பருத்தி பறித்துக் கொண்டிருந்தார். அச்சமயம், உசிலம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த சில காவலர்கள் அங்கு வந்து, அவரது கணவரைப் பற்றி விசாரித்தனர். அவர் வீட்டில் இல்லை எனச் சொன்னதும், ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை தேவை என்று கூறி, அந்தப் பெண்ணையே முதலில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மதுரை அருகிலுள்ள ஊமச்சிகுளம் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டார். ஒரே இரவில் அவரது வாழ்க்கை முற்றிலும் தலைகீழானது. மறுநாள் காலை வரை காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த நாள் காலை அவரது கணவரும் அதே காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அந்த தருணத்தில்தான், அவர்கள் வாழ்க்கையின் மிகக் கொடூரமான அத்தியாயம் தொடங்கியது. சித்ரவதை… சித்ரவதை… முடிவில்லா கொடுமை ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டதாக அந்தப் பெண் நினைவுகூர்கிறார். நண்பகல் நேரத்தில், கருப்பாயூரணி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அவரது கணவரை மட்டும் அழைத்துச் சென்று அங்கேயும் சித்ரவதை செய்துள்ளனர். மாலை நேரத்தில் மீண்டும் ஊமச்சிகுளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து, தாக்குதல் தொடர்ந்ததாக அவர் கூறுகிறார். அடுத்த நாட்களிலும் சித்ரவதை நிற்கவில்லை. ஜூலை 30 ஆம் தேதி, அவரது கணவரை மட்டும் வண்டியில் ஏற்றி எம்.கல்லுப்பட்டிக்கு அழைத்துச் சென்று, ஒரு நகைக்கடையில் பத்து பவுன் நகை விற்றதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அவர் அதை மறுத்ததால் தாக்குதல் மேலும் தீவிரமானதாகவும் அந்தப் பெண் கூறுகிறார். மருத்துவமனை… ஆனால் உயிர் தப்பவில்லை ஆகஸ்ட் 2 ஆம் தேதி, இருவரையும் உசிலம்பட்டி டிஎஸ்பி முன் ஆஜர்படுத்தியபோது, அவர்கள் உடல் நிலை மிக மோசமாக இருந்ததால் பொறுப்பேற்க மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அதே நாளில் அவரது கணவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கணவர் மரணித்த வேதனையுடன், தன்னுடைய உடலில் இருந்த காயங்களையும் சுமந்து கொண்டு, அவர் ஒரு நீண்ட நீதிப் போராட்டத்திற்கு தயாரானார். உடற்கூராய்வு, விசாரணை… ஆனால் நீதி தாமதம் உடற்கூராய்வு அறிக்கையில், கணவர் அடிபட்ட காயங்களால் உயிரிழந்ததாக தெளிவாக குறிப்பிடப்பட்டது. ஆர்.டி.ஓ விசாரணையும் நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கே பல ஆண்டுகள் ஆனது. ஒரு வழியாக 2012 ஆம் ஆண்டு விசாரணை தொடங்கியது. 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், காலப்போக்கில் பலர் சாட்சியங்களை மாற்றினர். இறுதியில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களும் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பு அந்தத் தாயையும், மகனையும் உள்ளுக்குள் உடைத்தது. தந்தையின் மரணம் மகனை சட்டப் பாதைக்கு இட்டது இந்த சம்பவம் நடந்தபோது, அந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். மூத்த மகன் 14 வயது பள்ளி மாணவன். தந்தையை இழந்த அந்தப் பையனுக்குள் இருந்த கோபம், ஆரம்பத்தில் பழிவாங்கும் எண்ணமாகவே இருந்தது. ஆனால், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சட்டம் படித்து பலருக்குப் போராட வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். அந்த அறிவுரைதான், அவனின் வாழ்க்கை திசையை மாற்றியது. காலப்போக்கில் அவர் சட்டம் படித்து, வழக்கறிஞராக மாறினார். தந்தை தொடர்பான வழக்கு விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உதவியாக இருந்து, சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வருவது முதல் ஆவணங்களைத் திரட்டுவது வரை அனைத்திலும் ஈடுபட்டார். “நீதி கிடைக்கும் வரை விடமாட்டேன்” உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், அவர்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. “சித்ரவதை நடந்ததே இல்லை என்று நீதிமன்றம் சொல்லவில்லை. நிரூபணம் போதவில்லை என்பதால்தான் விடுதலை,” என்கிறார் அந்த மகன். அதனால், உச்ச நீதிமன்றத்தை நாடும் முயற்சியில் இன்னமும் இருக்கிறார்கள். “பணம் வேண்டாம். சமாதானமும் வேண்டாம். என்னைப் போல இன்னொருத்தி அழக்கூடாது. அதற்காகத்தான் இந்தப் போராட்டம்,” என்கிறார் அந்தப் பெண். 27 ஆண்டுகள் கடந்தும், அவரது குரலில் இருக்கும் உறுதி, இந்தப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்கிறது.
சாலைப் போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப்பில் வந்த ஒரு தகவலை நம்பியதால், கோவையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.16.5 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடிக்குப் பின்னால் குஜராத்தை மையமாகக் கொண்ட ஒரு கும்பல் செயல்பட்டு வந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அபராத மெசேஜ் என்ற பெயரில் வந்த ஏபிகே ஃபைல் கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சாமுவேல் சந்திரபோஸ் என்பவருக்கு, கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி அவரது வாட்ஸ்ஆப்பிற்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில், அவரது வாகனம் போக்குவரத்து விதிகளை மீறியதாகவும், அபராதம் செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கூடவே, விவரங்களைப் பார்க்க ஒரு APK ஃபைல் இணைக்கப்பட்டிருந்தது. அந்த தகவல் உண்மை என நம்பிய சாமுவேல், தனது வாகனத்திற்கு உண்மையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய அந்த ஃபைலை பதிவிறக்கம் செய்துள்ளார். இதுவே அவரின் வங்கிக் கணக்குக்கு ஆபத்தான தொடக்கமாக மாறியுள்ளது. மொபைல் ஹேக்… தொடர்ந்து வந்த ஓடிபி எண்கள் ஏபிகே ஃபைல் திறந்த சில நிமிடங்களிலேயே அவரது மொபைல் போன் முற்றிலும் செயலிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அடுத்த நாள் முதல், அவரது மொபைல் எண்ணுக்கு தொடர்ந்து ஓடிபி எண்கள் வந்துகொண்டே இருந்தாலும், அவர் அதைக் கவனிக்கவில்லை. சில நேரங்களில், அவரது வங்கியில் வைத்திருந்த நிரந்தர வைப்புத் தொகை எடுத்துவிட்டதாக குறுஞ்செய்தி வந்தபோதுதான், அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். ரூ.16.49 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை ஆன்லைனில் கொள்ளை வங்கிக்கு நேரில் சென்று கணக்கை சரிபார்த்தபோது, நிரந்தர வைப்புத் தொகையாக வைத்திருந்த ரூ.16,49,961 முழுவதும் ஆன்லைன் வழியாக மோசடி செய்யப்பட்டு எடுத்துவிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சாமுவேல் சந்திரபோஸ் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரிமோட் கட்டுப்பாட்டை கைப்பற்றிய மோசடி கும்பல் காவல்துறையின் விசாரணையில், மொபைலில் உள்ள remote access வசதியை பயன்படுத்தி, மோசடி நபர்கள் சாமுவேலின் வங்கிக் கணக்கை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. நிரந்தர வைப்புத் தொகையை ‘க்ளோஸ்’ செய்து, அந்த பணத்தை பல்வேறு கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகளைச் செலுத்த பயன்படுத்தியுள்ளனர். இந்த கிரெடிட் கார்டுகள் அனைத்தும் போலி முகவரிகளை பயன்படுத்தி பெறப்பட்டவையாகும். தடம் பிடித்த கோவை சைபர் கிரைம் போலீஸ் இந்த கிரெடிட் கார்டுகள் எங்கு பயன்படுத்தப்படுகின்றன என்பதை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்த காவல்துறைக்கு, அவை அனைத்தும் குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கோவை மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அழகுராஜ் தலைமையில் தனிப்படை ஒன்று சூரத் நகருக்கு அனுப்பப்பட்டது. ஐந்து முதல் ஆறு நாட்கள் தொடர்ந்து கண்காணித்த பிறகு, ஒரே கும்பலாக செயல்பட்டு வந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 311 கார்டுகள், மொபைல்கள், பணம் பறிமுதல் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து, ரூ.3.5 லட்சம் ரொக்கம் 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் 10 மொபைல் போன்கள் ஸ்வைப்பிங் மெஷின் காசோலை புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சாமுவேலின் வங்கிக் கணக்கிலிருந்து மாற்றப்பட்ட ரூ.6.39 லட்சம் தொகை முடக்கப்பட்டு, நீதிமன்றம் வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிரெடிட் கார்டுகள் மூலம் பொருட்கள் வாங்கி விற்பனை காவல்துறையின் கூற்றுப்படி, இந்த கும்பல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி விலை உயர்ந்த பொருட்களை வாங்கி, அவற்றை குறைந்த விலையில் மற்றவர்களிடம் விற்று பணமாக மாற்றியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில், ஒருவர் ஹோட்டலில் மனித வள அலுவலராக பணியாற்றியவர் ஒருவர் சேலை வியாபாரி சிலர் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு இ-சலான் vs போலி இ-சலான்: எச்சரிக்கை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாவது, அரசு தரப்பிலிருந்து வரும் இ-சலான் தகவல்கள் வாட்ஸ்ஆப்பில் ஒருபோதும் அனுப்பப்படாது. அவை: குறுஞ்செய்தி (SMS) வழியாக மட்டுமே வரும் gov.in டொமைன் கொண்ட லிங்குகள் இருக்கும் APK ஃபைல் எதுவும் இருக்காது வாட்ஸ்ஆப்பில் வரும் லிங்க்கள் அல்லது ஃபைல்களை திறந்தால், மொபைல் சூடாகுதல், செயலிழப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும் என்றும், உடனே அலர்ட் ஆக வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். “வேறு யாரும் ஏமாறக்கூடாது” – பாதிக்கப்பட்ட நபர் இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட சாமுவேல் சந்திரபோஸ், “நான் கஷ்டப்பட்டு சேமித்த பணம் முழுவதும் போய்விட்டது. ஆனால் சைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கையால், என் பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. என் அனுபவம் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
“எந்த வேலையையும் கடமையாகவே பார்த்தவர் என் அம்மா. எல்ஐசி என்றால் அவர் வாழ்க்கை,” என்கிறார் லட்சுமி நாராயணன். மதுரை எல்ஐசி கிளை மேலாளராக பணியாற்றி வந்த அவரது தாய் கல்யாணி நம்பி, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி கொடூரமாக கொல்லப்பட்டார். முதலில் தீ விபத்தாக கருதப்பட்ட இந்தச் சம்பவம், போலீஸ் விசாரணையில் கொலை என்று மாறியது. இந்த வழக்கில், அதே அலுவலகத்தில் பணியாற்றிய உதவி நிர்வாக அலுவலர் ராம் கைது செய்யப்பட்டுள்ளார். தீ விபத்தாக தொடங்கிய விசாரணை டிசம்பர் 17 அன்று இரவு, மதுரை எல்ஐசி கிளை அலுவலகத்தில் தீ ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்தச் சம்பவத்தில் கிளை மேலாளர் கல்யாணி நம்பி உயிரிழந்தார். அதே நேரத்தில், உதவி நிர்வாக அலுவலர் ராம் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீ விபத்து என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை தொடங்கியது. மின்கசிவு அல்லது குளிர்சாதனப் பெட்டி கோளாறு காரணமா என ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது பின்னர் உறுதியானது. வழக்கை திருப்பிய கடைசி தொலைபேசி அழைப்பு சம்பவ நாளன்று இரவு 8.27 மணிக்கு, கல்யாணி நம்பி தனது மகனுக்கு அவசரமாக தொலைபேசி செய்துள்ளார். “போலீசை கூப்பிடு… போலீசை கூப்பிடு…” என அவர் பதற்றத்துடன் கூறியதாக மகன் லட்சுமி நாராயணன் தெரிவிக்கிறார். இந்த ஒரு தகவலே, இது சாதாரண தீ விபத்து அல்ல என்ற சந்தேகத்தை காவல்துறைக்கு ஏற்படுத்தியது. அலுவலகத்தில் யார் இருந்தனர்? திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர் அழகர் கூறுகையில், “சம்பவ நேரத்தில் அலுவலகத்தில் மூன்று பேர் மட்டுமே இருந்தனர். கல்யாணி நம்பி, ராம் மற்றும் சங்கர்,” என்றார். மாலை 8 மணியளவில் சங்கர் பணியை முடித்து சென்றுவிட்டதாகவும், அதன் பின்னர் கல்யாணி நம்பி மற்றும் ராம் மட்டுமே அலுவலகத்தில் இருந்ததாகவும் விசாரணையில் உறுதியானது. மேலும், இரவு நேரத்தில் வெளியிலிருந்து யாரும் உள்ளே நுழைய முடியாத பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்ததும் போலீசார் தெரிவித்தனர். சந்தேகத்தை உறுதி செய்த ஆதாரங்கள் சம்பவத்திற்குப் பிறகு, முன்புற கதவை ராம் பூட்டிவிட்டு பின்புற வாசல் வழியாக வெளியே சென்றது தீயணைப்புத் துறை வந்தபோது அங்கு வேறு யாரும் இல்லாதது ராமுக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது ஆகிய தகவல்கள் சந்தேகத்தை வலுப்படுத்தின. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ராம் மீது போலீசார் கவனம் செலுத்தத் தொடங்கினர். பணிச்சூழல் காரணமான மோதல் விசாரணையில், அலுவலகத்தில் நீண்ட காலமாக பணிச்சூழல் தொடர்பான பிரச்னைகள் இருந்தது தெரியவந்தது. காப்பீடு உரிமை கோரல் விண்ணப்பங்களை ராம் சரியான நேரத்தில் செயல்படுத்தாததால், பல குடும்பங்கள் கல்யாணி நம்பியிடம் புகார் அளித்ததாக காவல்துறை தெரிவித்தது. இதனால், கல்யாணி நம்பி ராமை பலமுறை கண்டித்துள்ளார். இதன் காரணமாக, ராமுக்கு கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் போலீசார் கூறினர். கொலைக்கான காரணம் என்ன? போலீசாரின் கூற்றுப்படி, பணிச்சுமை, கண்டிப்பு மற்றும் மன உளைச்சல் காரணமாக ஏற்பட்ட கோபத்தில்தான், ராம் கல்யாணி நம்பியின் அறைக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் கேன், அவர் பெட்ரோல் வாங்கிய இடம் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. விபத்து இல்லை, திட்டமிட்ட கொலை சிசிடிவி காட்சிகள் தீயில் எரிந்துவிட்டாலும், கிடைத்த ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பதைக் காவல்துறை உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில், ராம் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலம் சோட்டா உதேபூர் பகுதியில், சட்டவிரோதமாக மதுபானங்களை கடத்தி வந்த கார் ஒன்று, காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில், அந்தப் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனைக்காக தடுப்புகளை அமைத்திருந்தனர். அந்த நேரத்தில், அதிக வேகத்தில் வந்த ஒரு கார் தடுப்புகளை பொருட்படுத்தாமல் மோதி உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்தல் சந்தேகத்துக்கிடமான காரை பார்த்ததும், காவல்துறையினர் உடனடியாக பின்தொடர்ந்து துரத்திச் சென்றனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து துரத்தப்பட்ட பின்னர், அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், கார் நிறுத்தப்பட்டவுடன், அதிலிருந்த நபர் காவல்துறையை ஏமாற்றி அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. காரில் இருந்து மதுபானங்கள் பறிமுதல் காவல்துறையினர் காரை சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய நபரை தேடும் பணி தீவிரம் காரை ஓட்டி வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகனப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பியோடியவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் கர்நூலில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவம், தனிப்பட்ட உறவு விரோதம் எவ்வளவு ஆபத்தான குற்றமாக மாறலாம் என்பதைக் காட்டுகிறது. காதல் தோல்வியால் ஏற்பட்ட கோபத்தில், ஒரு பெண் தனது முன்னாள் காதலரின் மனைவிக்கு எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கர்நூல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர். அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணிமுடிந்து வீடு திரும்பியபோது நடந்த தாக்குதல் ஜனவரி 9ஆம் தேதி, வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த பெண் மருத்துவர், கே.சி. கால்வாய் சாலை அருகே சென்றபோது எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. அவரது ஸ்கூட்டரின் மீது மற்றொரு வாகனம் மோதியதால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. லேசான காயங்களுடன் இருந்த அந்த மருத்துவரிடம் உதவி செய்வது போல நடித்த சிலர், அவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் போவதாக கூறியுள்ளனர். உதவி என்ற பெயரில் ஊசி செலுத்தல் ஆட்டோவில் இருந்தபோது, தனக்கு யாரோ ஊசி செலுத்துவதை மருத்துவர் உணர்ந்துள்ளார். சந்தேகம் ஏற்பட்டாலும், அச்சமயத்தில் அவரால் எதிர்க்க முடியாத சூழ்நிலை இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். வீட்டிற்குச் சென்றபின் நடந்த சம்பவத்தை கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. காதல் தோல்வியே குற்றத்திற்கு காரணம்? வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் செவிலியராக பயிற்சி பெற்ற பெண் என்பது தெரியவந்தது. அந்தப் பெண், பாதிக்கப்பட்ட மருத்துவரின் கணவருடன் முன்பு காதல் உறவில் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருவரும் படிக்கும் காலத்தில் நெருக்கமாக இருந்தாலும், பின்னர் அந்த நபர் வேறொரு பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த குற்றம் சாட்டப்பட்ட பெண், பழிவாங்கும் நோக்கில் இந்த செயலை திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். எச்.ஐ.வி ரத்தம் எப்படிக் கிடைத்தது? குற்றம் சாட்டப்பட்ட பெண், கர்நூல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மற்றொரு செவிலியரின் உதவியுடன், எச்.ஐ.வி தொற்று உள்ள ரத்த மாதிரியைச் சேகரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த ரத்த மாதிரி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்டதாகவும், இரவுப் பணியில் இருந்தபோது அது சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. குழந்தைகள் உட்பட நான்கு பேர் கைது இந்தத் திட்டத்தை செயல்படுத்த, குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது தோழி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உதவியைப் பெற்றுள்ளார். சம்பவ நாளன்று, ஸ்கூட்டரில் மோதல் ஏற்படுத்தியது முதல் ஊசி செலுத்தியது வரை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். சிசிடிவி மற்றும் செல்போன் ஆதாரங்கள் முக்கிய பங்கு இந்த வழக்கை தீர்க்க, தொழில்நுட்ப ஆதாரங்கள் முக்கியமாக அமைந்ததாக கர்நூல் காவல்துறை தெரிவித்துள்ளது. சிசிடிவி காட்சிகள், வாகன எண் பதிவுகள் மற்றும் செல்போன் அழைப்புப் பட்டியல்கள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். பாதிக்கப்பட்ட மருத்துவர் எடுத்த புகைப்படங்களும் விசாரணைக்கு பெரும் உதவியாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்கிறது ஊசியில் உண்மையில் எவ்வகையான வைரஸ் இருந்தது, அந்த ரத்தம் எவ்வாறு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தது, மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதையும் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், தொடர்புடைய அனைவர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம் தொடர்பான வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொலை வழக்கில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது. பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் வேலை தேடி சென்னைக்கு வந்த நிலையில், மூவரும் கொல்லப்பட்டு வெவ்வேறு இடங்களில் சடலங்கள் வீசப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சாக்குமூட்டையில் ரத்தம்: சந்தேகத்தை ஏற்படுத்திய சம்பவம் அடையாறு இந்திரா நகரில் ஜனவரி 26ஆம் தேதி, இருசக்கர வாகன விற்பனை நிலையம் அருகே சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. அந்த மூட்டையிலிருந்து ரத்தம் வழிந்தோடியதை கண்ட பொதுமக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சாக்குமூட்டையை திறந்து பார்த்தபோது, தலையில் வெட்டுக் காயங்களுடன் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பது தெரியவந்தது. அந்த உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆடையில் இருந்த தொலைபேசி எண் கொடுத்த முக்கிய துப்பு இறந்த நபரின் உடையில் இருந்த சில தொலைபேசி எண்களை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அந்த எண்களில் ஒன்று, சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் பாதுகாப்பு ஏஜென்சி நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்நிறுவனத்தில் விசாரணை நடத்தியபோது, உயிரிழந்தவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், சென்னையில் காவலாளி வேலை தேடி வந்ததும் உறுதி செய்யப்பட்டது. வேலை கிடைக்காமல் தவித்த குடும்பம் இந்த இளைஞர், தனது மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தையுடன் சென்னைக்கு வந்திருந்தார். ஆனால், எதிர்பார்த்தபடி வேலை கிடைக்காததால், தற்காலிகமாக பல இடங்களில் தங்கியிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில், தரமணியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த சத்யேந்தர் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன்பின், அந்த நபர் தனது வேலை பார்க்கும் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள பயன்படுத்தப்படும் கட்டடத்தில், குடும்பத்தை தங்க வைத்துள்ளார். மதுபான வாக்குவாதம் – கொடூர முடிவு கடந்த 24ஆம் தேதி இரவு, சத்யேந்தர், லலித் யாதவ் மற்றும் விகாஷ் குமார் ஆகிய மூவரும், அந்த பிகார் இளைஞருடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் பெரும் வன்முறையாக மாறியுள்ளது. இந்த தகராறில், மூவரும் சேர்ந்து இளைஞர், அவரது மனைவி மற்றும் குழந்தையை இரும்பு ராடால் தாக்கியதாக, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சடலங்களை மறைக்க எடுத்த கொடூர முயற்சி கொலைக்குப் பிறகு, மூன்று சடலங்களையும் சாக்குமூட்டைகளில் கட்டி, வெவ்வேறு இடங்களில் வீசியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குழந்தையின் சடலம் மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. பெண்ணின் சடலம் தரமணி அருகே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு, பின்னர் பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதலுக்குப் பிறகு, பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. பாலியல் தாக்குதல் கோணம் – விசாரணை தொடர்கிறது பெண்ணின் சடலம் கிடைத்துள்ள நிலையில், அவருக்கு பாலியல் ரீதியான தாக்குதல் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கையை போலீசார் எதிர்பார்த்து வருகின்றனர். மூவர் கைது – கடும் தண்டனை கோரல் இந்த கொடூர கொலை வழக்கில், சத்யேந்தர், லலித் யாதவ் மற்றும் விகாஷ் குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, ஜனவரி 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குடும்பத்தின் வலி: சகோதரரின் பேட்டி உயிரிழந்த இளைஞரின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், குடும்பத் தகராறு காரணமாக சகோதரருடன் தொடர்பில் இல்லாமல் இருந்ததாகவும், அவர் சென்னை வந்த தகவலை தந்தையின் மூலம் மட்டுமே அறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். இளைஞரின் உடல் அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மியான்மர் எல்லை குற்ற உலகம்: சீனாவின் கடும் நடவடிக்கைக்கு பின்னால் என்ன? கடந்த செப்டம்பரில், மியான்மரின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் செயல்பட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பைச் சேர்ந்த 11 பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியது. இந்த திடீர் நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்தாலும், சீனாவின் சட்ட நடைமுறைகளை அறிந்தவர்களுக்கு இது எதிர்பாராததாக இருக்கவில்லை. மனித உரிமை அமைப்புகள் கூறுவதுபோல், உலகிலேயே அதிக மரண தண்டனைகள் வழங்கப்படும் நாடாக சீனா உள்ளது. இருப்பினும், சரியான எண்ணிக்கை அரசாங்க ரகசியமாகவே வைக்கப்படுகிறது. குறிப்பாக, நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமூக நிலைத்தன்மையை பாதிக்கும் குற்றங்களில் சீனா தாமதமின்றி கடும் நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம். சாதாரண சட்டவிரோதம் அல்ல: எல்லை தாண்டிய குற்ற வலையமைப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மியான்மரின் ஷான் மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட மிங் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள், பொருளாதார மோசடிகளைக் கடந்த, மனித உரிமை மீறல் மற்றும் கொடூர வன்முறை குற்றங்களாக இருந்தன. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு, லௌக்கைங் நகரம் மிங், பௌ, வெய், லியு ஆகிய நான்கு குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இக்குடும்பங்கள் அந்தப் பகுதியின் அரசியல், பொருளாதாரம், சட்ட ஒழுங்கு அனைத்திலும் செல்வாக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆயுதக் குழுக்கள் விலகிய பின் உருவான புதிய அதிகார மையம் ஒரு காலத்தில் எம்.என்.டி.ஏ.ஏ எனப்படும் ஆயுதமேந்திய இனக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த லௌக்கைங், மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்குப் பிறகு வெற்றிடமாக மாறியது. அந்த வெற்றிடத்தை நிரப்பியதுதான் இந்த நான்கு குடும்பங்கள். முன்னதாக போதைப்பொருள் சார்ந்திருந்த அந்தப் பகுதி, பின்னர் சூதாட்ட விடுதிகள் மற்றும் இணைய மோசடி மையங்களின் தளமாக மாறியது. இந்த மாற்றம் அந்த நகரத்தின் முழு பொருளாதார அமைப்பையே மாற்றியதாக கூறப்படுகிறது. அரசியல் நெருக்கமும் பாதுகாப்பும் எப்படி உருவானது? இந்த குடும்பங்கள் மியான்மர் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தன. 2021ஆம் ஆண்டு அதிகாரத்தை கைப்பற்றிய பின், மின் ஆங் ஹ்லைங் தலைநகரில் லியு குடும்பத் தலைவரை கௌரவித்த சம்பவம், அந்த நெருக்கத்தின் வெளிப்படையான உதாரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், குடும்ப உறுப்பினர்கள் சிலர் ராணுவ ஆதரவு பெற்ற அரசியல் கட்சிகளில் போட்டியிட்டதன் மூலம், அவர்களது செயல்பாடுகள் நீண்ட காலம் கேள்விக்குறியாகாமல் தொடர்ந்தன. வேலைவாய்ப்பு என்ற பெயரில் சிக்கிய ஆயிரக்கணக்கான சீனர்கள் லௌக்கைங் பகுதியில் செயல்பட்ட மோசடி மையங்கள், ஆசியாவின் மிகக் கொடூரமான இணைய மோசடி தளங்களாக மாறின. அதிக சம்பளம், வெளிநாட்டு வேலை என்ற வாக்குறுதிகளால் சீனாவிலிருந்து இளைஞர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால், அவர்கள் கட்டடங்களில் பூட்டப்பட்டு, இணைய வழி மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டனர். மறுப்பு தெரிவித்தவர்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டதாகவும், பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஒரு சம்பவம் மாற்றிய சீனாவின் நிலைப்பாடு ‘க்ரெளசிங் டைகர் வில்லா’ என்ற மோசடி மையத்தில் நடந்த சம்பவம், சீன அரசின் பொறுமையை முடிவுக்கு கொண்டு வந்தது. 2023ஆம் ஆண்டு அக்டோபரில், தப்பிக்க முயன்ற சீனர்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள், சீனாவை நேரடி நடவடிக்கைக்கு தூண்டின. இதன் விளைவாக, சீன ஆதரவுடன் எம்.என்.டி.ஏ.ஏ குழு லௌக்கைங்கை மீண்டும் கைப்பற்றியது. அதன்பின், குற்ற வலையமைப்பை முற்றிலும் ஒழிப்பதாக அறிவிக்கப்பட்டது. கைது முதல் தூக்கு வரை: சீனாவின் வேகமான நடவடிக்கை இந்த நடவடிக்கையில், நான்கு குடும்பங்களின் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு சீனாவுக்கு ஒப்படைக்கப்பட்டனர். மிங் குடும்பத் தலைவர் கைது செய்யப்பட்ட பின் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. விசாரணையின் போது வெளிவந்த கொடூர தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது சீனாவின் “உதாரண தண்டனை” (deterrence) அணுகுமுறையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. முடிவடையாத போராட்டம்: குற்ற வணிகம் இடம் மாறுகிறது மிங் குடும்பத்திற்கு எதிரான நடவடிக்கை கடுமையானதாக இருந்தாலும், இணைய மோசடி தொழில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூற முடியாது. தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளுக்கு இந்த வலையமைப்பு நகர்ந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், சீனாவின் இந்த நடவடிக்கை ஒரு குடும்பத்தைக் கடந்த, எல்லை தாண்டிய குற்ற உலகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம், காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. தோள் மற்றும் வயிறு வலிக்கான சிகிச்சை என்ற பெயரில் ஊசி போட்டு, பெற்றோரையே மகளே கொலை செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் பந்த்வாரம் மண்டலத்துக்கு உட்பட்ட யாசாரம் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. நக்கலி தசரத் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் ஒரே இரவில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். இயற்கை மரணம் போல் தோற்றமளித்த இந்த சம்பவத்தில், அவர்களின் மகன் அசோக்கிற்கு ஏற்பட்ட சந்தேகமே உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. சகோதரனின் புகாரால் தொடங்கிய விசாரணை ஜனவரி 24ஆம் தேதி இரவு, பெற்றோர் இருவரும் திடீரென இறந்துவிட்டதாக மகள் சுரேகா, தனது சகோதரன் அசோக்கிற்கு தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார். “அப்பா மயங்கி விழுந்தார், அதை பார்த்து அம்மாவுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது” என அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் ஒரே நேரத்தில் இருவரும் உயிரிழந்தது அசோக்கிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டை முழுமையாக ஆய்வு செய்தனர். வீட்டில் கிடைத்த முக்கிய ஆதாரம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரத்தக்கறை படிந்த இரண்டு ஊசிகள் கைப்பற்றப்பட்டன. இதுவே விசாரணையின் திசையை மாற்றிய முக்கிய ஆதாரமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து சுரேகாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. “முதலில் தாய்க்கும், பின்னர் தந்தைக்கும் ஊசி போடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இது இயல்பான மரணம் அல்ல” என விகராபாத் டிஎஸ்பி ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெரிவித்தார். செவிலியர் பின்னணி… மரண ஊசியாக மாறிய மருந்து சுரேகா சங்கரெட்டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர். ஊசி மற்றும் மருந்துகளின் விளைவுகள் குறித்து முழுமையான அறிவு கொண்டிருந்த அவர், அந்த அறிவையே கொலைக்காக பயன்படுத்தியதாக காவல்துறை கூறுகிறது. சம்பவ தினம் மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்த சுரேகா, தனது தாய் லட்சுமி அடிக்கடி வயிற்று வலி 있다고 கூறுவதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டார். “வலியை குறைக்க ஊசி போட்டால் நல்ல உறக்கம் வரும்” என கூறி, அதிக அளவு மயக்க மருந்தை செலுத்தியுள்ளார். இதனால் சில நிமிடங்களில் லட்சுமி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். தந்தைக்கும் அதே யுக்தி சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த தந்தை தசரத்திடம், “அம்மாவுக்கு தோள்பட்டை வலிக்காக ஊசி போட்டேன், அவர் தூங்குகிறார். உங்களுக்கும் முதுகு வலி இருக்கிறதே, உங்களுக்கும் போட்டுவிடுகிறேன்” என்று கூறி, அவருக்கும் ஊசி போட்டுள்ளார். அதிக அளவு மருந்து செலுத்தப்பட்டதால், தசரத்தும் உடனடியாக உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழப்பு ஏற்படும் என்பதை தெரிந்திருந்தும், திட்டமிட்டே இந்த செயலை சுரேகா செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. காதலே கொலைக்குக் காரணமா? விசாரணையில் மேலும் வெளிவந்த தகவலின்படி, கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் சங்கரெட்டியைச் சேர்ந்த இளைஞருடன் சுரேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த திருமணத்திற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். இதனால் வீட்டில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்துவந்ததாகவும், அந்த தடைகளை நீக்கவே சுரேகா இந்த கொடூர முடிவை எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய உண்மை “என் சகோதரி இப்படி ஒரு செயலில் ஈடுபடுவார் என்று நினைத்ததே இல்லை” என்று அசோக் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சுரேகா ஊடகங்களிடம் பேச மறுத்துள்ளார். அவரது உறவினர்களும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க தயங்கியுள்ளனர். இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் உருவாகும் உறவுகள் எவ்வளவு மோசமான முடிவுகளுக்கு வழிவகுக்கலாம் என்பதற்கான இன்னொரு அதிர்ச்சி உதாரணமாக பார்க்கப்படுகிறது.
லண்டன் நகரின் பரபரப்பான பகுதியில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில், முகமூடி அணிந்து ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் ஒரு நகைக்கடையில் திடீரென நுழைந்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுத்தியல்களை பயன்படுத்தி கண்ணாடி அலமாரிகளை உடைத்த கொள்ளையர்கள், அங்கிருந்த மதிப்புமிக்க நகைகளை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துணிகர கொள்ளை சனிக்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில் நடந்துள்ளது. எந்தவித அச்சமும் இன்றி சில நிமிடங்களிலேயே கொள்ளையை நிறைவேற்றிய அவர்கள், சம்பவ இடத்திலிருந்து விரைவாக தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த கொள்ளை சம்பவம் பிரபலமான ‘டெட் லாசோ’ என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கு அருகில் நடந்துள்ளது. ஏற்கனவே கவனத்தை பெற்றிருந்த அந்தப் பகுதியில், இச்சம்பவம் மேலும் பரபரப்பையும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சம்பவத்தின் போது கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடனடி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண லண்டன் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பு: இந்தச் செய்தியில் உள்ள சில தகவல்கள் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். மூன்று குழந்தைகள் இருப்பதால் ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதி இழக்க நேரிடும் என்ற அச்சத்தில், தந்தை ஒருவர் தனது ஆறு வயது மகளைக் கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாண்டுரங்க கொண்டமங்கலே என்பவரை நிஜாமாபாத் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமி பிராச்சி கொண்டமங்கலே என அடையாளம் காணப்பட்டுள்ளார். கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட உடல் தெலங்கானா மாநிலம் ஏடப்பள்ளி அருகே உள்ள நிஜாம்சாகர் கால்வாயில் சிறுமியின் உடல் கிடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, ஏசிபி ஸ்ரீனிவாஸ் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் வெளிவந்த உண்மை குழந்தையின் அடையாளம் தெரியாத நிலையில், காவல்துறையினர் வெளியிட்ட தகவலை ஒரு காவலர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த மகாராஷ்டிரா மாநிலம் முகேத் தாலுகாவைச் சேர்ந்த உறவினர்கள், அந்தச் சிறுமி தங்களுடைய உறவினர் என உறுதி செய்தனர். தேர்தல் ஆசைதான் காரணம் பாண்டுரங்க கொண்டமங்கலே கேரூர் கிராமத்தில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். வரவிருக்கும் மகாராஷ்டிரா பஞ்சாயத்து தேர்தலில், மூன்று குழந்தைகள் இருப்பவர்கள் போட்டியிட தகுதி இல்லை என்ற விதி இருப்பதால், தன்னைத் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என அவர் அஞ்சியதாக போலீசார் தெரிவித்தனர். கிராமத்தின் தற்போதைய ஊராட்சித் தலைவர் கணேஷ் ஷிண்டே, பாண்டுரங்கவை போட்டியிட வைக்க முயன்றதாகவும், இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையை அகற்றும் திட்டம் தீட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தத்து கொடுப்பதில் தோல்வி – கொலைக்கு முடிவு முதலில் ஒரு குழந்தையைத் தத்து கொடுக்க முயன்றனர். ஆனால், சட்ட விதிமுறைகள் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன் பின்னர், இரட்டையர்களில் ஒருவரான பிராச்சியை கொன்றுவிட்டால், இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பதாகக் கணக்கிட்டு, இந்த கொடூர முடிவை எடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அண்டை மாநிலத்தில் கொலை அடையாளம் தெரியாமல் போகும் என்ற எண்ணத்தில், மகாராஷ்டிராவில் அல்லாமல் தெலங்கானாவில் குழந்தையை கொல்ல திட்டமிட்டதாக பாண்டுரங்க விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். பைக்கில் அழைத்துச் சென்று நிஜாம்சாகர் கால்வாயில் தள்ளிவிட்டதில் சிறுமி உயிரிழந்துள்ளார். கைது இந்த வழக்கில் பாண்டுரங்க கொண்டமங்கலே மற்றும் அவரது கூட்டாளி கணேஷ் ஷிண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து இருவரின் குடும்பத்தினரிடமும் தகவல் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் பதிவாகும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே குற்றம் நிரூபிக்கப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் 26,508 பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2,419 பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு சென்றுள்ளன. ஆனால், 2022ஆம் ஆண்டு வரை நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 1,98,285 பாலியல் வன்கொடுமை வழக்குகளில், வெறும் 5,067 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 20,852 பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்குகளில், வெறும் 192 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், 12,062 வழக்குகள், போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் அடிப்படையில், மொத்த பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 2.56% மட்டுமே பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்குகளில் 0.92% மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த குறைந்த குற்ற நிரூபண விகிதம், விசாரணை நடைமுறைகள், ஆதார சேகரிப்பு, நீதிமன்ற தாமதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள பல சட்டங்கள், கடுமையான குற்றங்களுக்கே அல்லாமல், சாதாரண தவறுகள் மற்றும் குற்ற நோக்கம் இல்லாத செயல்களுக்கும் கூட சிறைத் தண்டனை விதிக்கக்கூடியதாக உள்ளன என்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தரவுகளின்படி, இந்தியாவில் மொத்தம் 5,333 வகையான செயல்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் அளவிலான குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு உணவு கொடுப்பது, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சிகிச்சை பெறாதது, நீதிமன்றம் உத்தரவிட்ட மாற்றங்களை மேற்கொள்ளாதது, விதிமுறைகளை பின்பற்றாதது போன்ற செயல்களும் அடங்கும். மேலும், மின்சார உபகரணங்களை பாதுகாப்பான நிலையில் பராமரிக்கத் தவறினால் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமான வரி விளக்கங்களை காலத்துக்குள் சமர்ப்பிக்காதவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை, பழங்கால பொருட்கள் அல்லது கலைப் பொருட்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை, மாசுபாடு தடுப்பு விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் வரை சிறை விதிக்கப்படலாம் என அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. தரவுகளின்படி, 622 வகையான குற்றங்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படலாம் 993 வகையான குற்றங்களுக்கு கட்டாய சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது 301 குற்றங்கள் மரண தண்டனைக்குரியவையாக உள்ளன 5,842 குற்றங்களுக்கு சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது இவ்வாறு, சிறிய தவறுகளுக்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது சட்ட அமைப்பின் குறையாக இருப்பதாகவும், இத்தகைய சட்டங்களில் திருத்தம் தேவை என சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தி வருவதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது அல்ல; அறிவியல் முறையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் ஆதாரங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டதாக முன்னாள் திட்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அந்த ஆய்வறிக்கையில் திருத்தம் செய்வது குற்றமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கீழடி அகழாய்வு தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி அகழாய்வின் முக்கியத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகக் கூறினார். இந்தியா என்பது பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு என்றும், சிந்து சமவெளி நாகரீகத்தையும், வேதகால நாகரீகத்தையும் மட்டுமல்லாது, நாட்டின் பிற பகுதிகளின் வரலாறையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழகத்திற்கு உரிய சங்ககாலம் ஒன்று இருப்பதை மறக்கக்கூடாது என்றும், அந்த சங்ககாலம் எது என்பதை அறுதியிட்டு கூற முடியாத சூழலில், அதுகுறித்து விரிவான மற்றும் முறையான ஆய்வுகள் அவசியம் என்றும் அவர் கூறினார். மேலும், கீழடி ஆய்வறிக்கை அறிவியல்ரீதியாக இல்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் கூறியுள்ள கருத்துக்கு பதிலளித்த அமர்நாத் ராமகிருஷ்ணன், முதலில் அந்த ஆய்வறிக்கையை முழுமையாக படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கீழடியை ஒட்டி வைகை ஆற்றின் இடது மற்றும் வலது கரைகளில் மொத்தம் 293 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கீழடியில் வாழ்ந்த மக்கள் மறைந்தபின் கொந்தகையில் அடக்கம் செய்யப்பட்டனர் என்பதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார். தமிழர் வாழ்வின் தொடக்கம் எங்கு என்பதை அறிய கீழடி அகழாய்வுப் பணிகள் மிகவும் அவசியமானவை என்றும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தை புறக்கணிக்க முடியாது என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேலூரில் ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டு, அவரை ரயிலிலிருந்து தள்ளிவிட்ட வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, சென்னையிலிருந்து வேலூருக்கு ரயிலில் பயணித்த 24 வயது இளம் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்ததுடன், ஜாப்ராபேட்டை அருகே ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டதாக குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் (25) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்துக்குப் பின்னர் காட்பாடி ரயில்வே காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வேலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், இன்று நீதிபதி கோகுலகிருஷ்ணன் தீர்ப்பளித்தார். இதில், குற்றவாளி ஹேமராஜுக்கு 15 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து, பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஹேமராஜ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இதே நபர் 2022 ஆம் ஆண்டு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த காலகட்டத்தில், 2025 பிப்ரவரி மாதம் கோவையிலிருந்து திருப்பதி சென்ற விரைவு ரயிலில் தனியாக பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்ட சம்பவத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த வழக்கில் ஹேமராஜுக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் சாதிய அடிப்படையிலான பாகுபாடு நடைபெறுவதாகக் கூறி, அந்த ஆலயத்தின் பாதிரியாரை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னமனூர் பொன்னகர் பகுதியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் பங்கேற்று வருகின்றனர். இங்கு தற்போது எடி. பிரான்சிஸ் தர்மானந்த் என்பவர் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஆலய அலங்கார பணிகளில் ஈடுபட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் தேவாலயத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்ததாகவும், அவமதிக்கும் வகையில் பேசப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட பாதிரியாரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் தேவாலயத்தின் வாயிலை மூடி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்பு அந்த ஆலயத்தில் பணியாற்றிய பல பாதிரியார்கள் அனைவரையும் சமமாக நடத்தி வந்ததாகவும், தற்போதைய பாதிரியார் மட்டும் பட்டியல் சமூக மக்களை தனித்துப் பார்க்கும் போக்கில் செயல்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை கத்தோலிக்க மகாசபை தொடர்பான பணிகளில் ஈடுபட அனுமதிக்காமல் புறக்கணித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காரில் மறைத்து கொண்டு வரப்பட்ட 200 கிலோ குட்கா – இருவர் கைது தமிழகத்தில் போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் சூழலில், விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினர் பெரிய அளவிலான குட்கா கடத்தலை தடுத்து நிறுத்தியுள்ளனர். விழுப்புரம் நகர எல்லைக்கு உட்பட்ட செஞ்சி தேசிய நெடுஞ்சாலை அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் காரில் கடத்தி வரப்படுவதாக சிறப்பு தனிப்படை காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நிறுத்தப்பட்ட ஒரு காரை சோதனை செய்ததில், அதில் மூட்டை மூட்டையாக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, காரில் இருந்த இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்சன் குமார் (26) மற்றும் உசைன்கான் (29) என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து விழுப்புரம் பகுதிக்கு விற்பனை நோக்கில் குட்கா பொருட்களை கடத்தி வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மேற்கு காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 200 கிலோ குட்கா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அக்கட்சி கோரியிருந்த ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தற்போது பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் அங்கீகாரம் பெறாத கட்சியாகும். இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வகையில், தேர்தல் ஆணையம் பொதுச் சின்னம் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 10 விருப்பச் சின்னங்களில் ‘விசில்’ முதலிடத்தில் இடம்பெற்றிருந்தது. கட்சித் தலைவர் விஜய் விரும்பிய சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளதால், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஒரு புதிய அரசியல் கட்சிக்கு மாநில அளவில் ஒரே சின்னம் வழங்கப்படுவது, அந்தக் கட்சியின் அடையாளத்தை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்ல உதவும் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. ‘விசில்’ சின்னம் எச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் மாற்றத்தைக் குறிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான குரல் அல்லது புதிய அரசியல் தொடக்கத்தின் குறியீடாக இதனை த.வெ.க. பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. இதுகுறித்து கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், “எங்கள் தலைவர் விரும்பிய விசில் சின்னமே கிடைத்துள்ளது. இது கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய ஆரம்ப கட்டமாகும்” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும், அவர்கள் பயன்படுத்தி வந்த ‘டார்ச் லைட்’ சின்னம் பொதுச் சின்னமாக மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் சின்னங்களும் இப்போதே கவனம் பெறத் தொடங்கியுள்ளன.
2026-ல் முழுமையாக அப்டேட் ஆகும் ஐபோன்கள்… விபரம் என்ன? செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய அளவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அந்த போட்டியை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரிய திட்டத்தை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2026-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு AI அடிப்படையிலான மிக முக்கியமான திருப்புமுனை ஆண்டாக அமையக்கூடும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஐ போட்டியில் ஏன் பின்னடைவை சந்தித்த ஆப்பிள்? ஓபன் ஏஐ, கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலேயே ஏஐ துறையில் தீவிரமாக கால்பதித்துவிட்டன. ChatGPT Google Gemini Microsoft Copilot போன்ற ஏஐ சேவைகள் மிக வேகமாக வளர்ச்சி கண்டன. இதற்குப் பின்னணியாக, ஆப்பிள் 2024-ஆம் ஆண்டில்தான் ‘Apple Intelligence’ என்ற தனது ஏஐ தளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இதனால், போட்டியாளர்களை விட ஆப்பிள் சற்றே தாமதமாக ஏஐ பயணத்தை தொடங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன. Apple Intelligence: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? Apple Intelligence மூலம், Writing Tools Clean Up (புகைப்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்கும் வசதி) On-device AI processing போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், கூகுள் ஜெமினி ChatGPT Copilot போன்ற ஏஐ மாடல்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிளின் ஏஐ அம்சங்கள் அதே அளவிலான திறனை வழங்கவில்லை என பல தொழில்நுட்ப விமர்சகர்கள் கூறினர். புதுப்பிக்கப்பட்ட Siri – இன்னும் முழுமை பெறவில்லை Apple Intelligence-இன் முக்கிய அங்கமாக கருதப்பட்ட புதுப்பிக்கப்பட்ட Siri, இன்னும் முழுமையான ஏஐ அசிஸ்டென்ட் அனுபவத்தை வழங்கவில்லை என்பதே ஆப்பிள் எதிர்கொள்ளும் பெரிய சவாலாக உள்ளது. இயற்கையான உரையாடல் திறன் கான்டெக்ஸ்ட் புரிதல் ஆப்-டூ-ஆப் செயல்பாடுகள் போன்ற விஷயங்களில் Siri, போட்டியாளர்களை விட பின்தங்கியுள்ளதாக விமர்சனம் செய்யப்படுகிறது. 2026-ல் ஆப்பிளின் ‘மாஸ்டர் பிளான்’ என்ன? தொழில்நுட்ப வட்டார தகவல்களின் படி, 2026-ல்: முழுமையாக ஏஐ-ஆதரவு பெற்ற Siri ஐபோன்களில் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட Apple Intelligence அதிக சக்தி வாய்ந்த on-device AI processing தனியுரிமையை மையமாகக் கொண்ட ஏஐ அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம், AI போட்டியில் ஆப்பிள் தன் இழந்த முன்னிலையை மீட்டெடுக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. முடிவாக AI உலகில் தாமதமாக நுழைந்தாலும், “சரியான நேரத்தில், சரியான முறையில்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருவதே ஆப்பிளின் நீண்டகால யுக்தியாக இருக்கலாம். 2026-ல் அப்டேட் ஆகும் ஐபோன்கள், வெறும் ஹார்ட்வேர் அப்டேட் அல்ல முழுமையான AI அனுபவத்தை வழங்கும் சாதனங்களாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், அதையே ஆயுதமாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’, ‘ஆன்லைன் விசாரணை’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மூத்த குடிமக்களை மனதளவில் மிரட்டி, அவர்கள் வாழ்நாள் சேமிப்பை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. மும்பையில் நடந்த சமீபத்திய ஒரு சம்பவம், இந்த மோசடிகள் எந்த அளவுக்கு திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த முறை, சைபர் குற்றவாளிகள் முன்னாள் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரையே பயன்படுத்தி, ஒரு மூதாட்டியிடமிருந்து சுமார் 3 கோடியே 71 லட்சம் ரூபாயை மோசடியாகப் பறித்துள்ளனர். காவல்துறை மற்றும் சிபிஐ விசாரணை என்ற பெயரில் நடந்த இந்த நாடகத்தில், அந்தப் பெண் பல வாரங்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு, மனதளவில் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு தொலைபேசி அழைப்பில் தொடங்கிய பயம் மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் கடந்த 26 ஆண்டுகளாக வசித்து வரும் அந்த மூதாட்டிக்கு, கடந்த ஆகஸ்ட் 18 அன்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. “உங்கள் அழைப்பை கொலாபா காவல் நிலையத்துடன் இணைக்கிறேன்” என்று கூறிய அந்த நபர், அழைப்பைத் துண்டித்துள்ளார். சில நிமிடங்களில், அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை காவல் நிலைய அதிகாரி என்று அறிமுகப்படுத்தி, “உங்கள் ஆதார் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அது சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார். இந்த தகவலைக் கேட்ட அந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். தனக்கு அப்படி எந்தக் கணக்கும் இல்லை என்றும், தான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் அவர் விளக்கம் அளிக்க முயன்றுள்ளார். கைது மிரட்டலும் போலி ஆவணங்களும் அவரின் விளக்கத்தை கேட்காமல், மோசடி நபர்கள் “இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உங்கள் பெயரும் அதில் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கைது செய்யப்படலாம்” என்று மிரட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பான போலி கடிதங்களையும், சட்ட ஆவணங்களைப் போல வடிவமைக்கப்பட்ட சில பதிவுகளையும் அவருக்கு அனுப்பியுள்ளனர். “நாங்கள் விசாரணை நடத்துகிறோம். எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கைது செய்வோம்” என்று அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தை யாரிடமும் சொன்னால், அவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக, அந்த மூதாட்டி கடும் பயத்தில் ஆழ்ந்துள்ளார். தனது வங்கிக் கணக்குகள், முதலீடுகள், வீட்டுத் தகவல்கள் என அனைத்தையும் அவர்களிடம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார். ‘ஆன்லைன் நீதிமன்றம்’ என்ற நாடகம் ஒரு கட்டத்தில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும், 24 மணிநேரமும் அவர்களது கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். விசாரணை நடத்தும் அதிகாரியின் பெயர் எஸ்.கே. ஜெயஸ்வால் என்றும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், அந்தப் பெண்ணிடம் அவரது வாழ்க்கையைப் பற்றி 2 முதல் 3 பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதச் சொல்லியுள்ளனர். “இது உங்கள் நிரபராதத்தை நிரூபிக்க உதவும்” என்று கூறி, அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளனர். பின்னர் நடந்தது இன்னும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வீடியோ காலில் வந்த ஒருவர், தன்னை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்கள் வழக்கு தீவிரமானது. ஆனால் நீங்கள் நிரபராதி” என்று கூறி, அவரது முதலீட்டு ஆவணங்களை கேட்டுள்ளார். அந்தப் பெண், இது உண்மையான நீதிமன்ற விசாரணை என்றே நம்பியுள்ளார். கணக்குகளை காலி செய்யச் செய்த திட்டம் சிறிது நேரத்தில், “உங்கள் கணக்கில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது” என்று கூறி, விசாரணையின் ஒரு பகுதியாக அவரது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பணமாக்கச் சொன்னுள்ளனர். பின்னர், அந்த தொகையில் 90 முதல் 95 சதவீதத்தை அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு தற்காலிகமாக மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். கைது பயத்தில் இருந்த அந்த மூதாட்டி, அவர்கள் சொன்னபடி பணத்தை அனுப்பியுள்ளார். இதற்குப் பிறகு, தொடர்ந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு மிரட்டல்கள் வந்துள்ளன. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடந்த இந்த மோசடியில், மொத்தமாக 3 கோடியே 71 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைச் சொல்லி காலம் கடத்தினர். இதன் பின்னர்தான் தான் மோசடியில் சிக்கியிருப்பதை அந்தப் பெண் உணர்ந்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் – வெளிவந்த உண்மை அக்டோபர் 13 அன்று, அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாட்ஸ்ஆப் உரையாடல்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், ஸ்கிரீன் ஷாட்கள் ஆகியவற்றை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல்துறையோ, சிபிஐயோ ஒருபோதும் வாட்ஸ்ஆப், வீடியோ கால் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக விசாரணை நடத்துவதில்லை. கைது செய்வதாக மிரட்டுவதும் இல்லை. அப்படிப்பட்ட அழைப்புகள் வந்தால், எந்தத் தகவலையும் பகிராமல் உடனே அந்த எண்ணைத் துண்டித்து, பிளாக் செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளின் புகைப்படங்கள், நீதிமன்ற பின்னணி போன்றவை காண்பிக்கப்பட்டாலும், அதனால் நம்ப வேண்டாம். இது ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம். சைபர் மோசடியில் சிக்கினால், உடனடியாக அரசு நடத்தும் சைபர் குற்ற புகார் தளத்தில் அல்லது உள்ளூர் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். தாமதமின்றி புகார் அளித்தால், பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜீவா நடிப்பில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியீடு சென்னை: நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் கதையும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜீவா, இதற்கு முன்பு ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் காமெடி, காதல், ஆக்ஷன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த புதிய படத்தில், சமூகப் பின்னணியுடன் கூடிய முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத்தில் அரசியல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாக கொண்டு கதை நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்கம், இசை மற்றும் நடிகர்களின் நடிப்பு படத்திற்கு முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதல் நாள் வசூல் மற்றும் ரசிகர் கருத்துகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடை குறைப்பு என்ற பெயரில் நடந்த விபரீதம் – மதுரை மாணவியின் மரணம்; ஆயுஷ், மருந்து கட்டுப்பாட்டு துறை கடும் எச்சரிக்கை மதுரையில் இளம் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவும் தவறான உடல்நல ஆலோசனைகளின் ஆபத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. உடல் எடையை குறைக்க முயன்ற நிலையில், வெங்காரம் என்ற பொருளை உட்கொண்டதால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக மாணவி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை செல்லூர் அருகே உள்ள மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த கலையரசி (19), அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். சிறுவயதிலிருந்தே உடல் பருமன் இருந்ததால், எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை அவர் தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரு வீடியோவில் கூறப்பட்ட ஆலோசனையை நம்பி, அருகிலுள்ள நாட்டு மருந்துக் கடையில் வாங்கிய வெங்காரத்தை கலையரசி உட்கொண்டுள்ளார். இதன் பின்னர், அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பிய நிலையில், அதே இரவு மீண்டும் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சம்பவத்திற்கு காரணமான நாட்டு மருந்துக் கடை மற்றும் சமூக வலைதள சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பாரம்பரிய மருத்துவ குறிப்புகள், எடை குறைப்பு டிப்ஸ் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவரி, பதிவு விவரம் இல்லாத விளம்பரங்களை நம்புவது ஆபத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் துறை அதிகாரிகள் கூறுகையில், “சமூக வலைதளங்களில் போலி முகவரி, தொடர்பு விவரம் இல்லாத விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நடவடிக்கை எடுப்பது சவாலாக உள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை நம்பாமல், அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்” என தெரிவித்துள்ளனர். எடை குறைப்பு, ஆண்மை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவும் விளம்பரங்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான புரிதலை உருவாக்கக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கலையரசியின் மரணம், இந்த ஆபத்துகளை உணர்த்தும் ஒரு துயரமான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.