கல்வி

புதுக்கோட்டை | பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பழங்குடி மாணவிகள் – வாத்திய முழக்கத்துடன் ஊரே கூடி கொண்டாடிய நெகிழ்ச்சி தருணம்

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஒரு பழங்குடி சமூகத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இதுவரை பத்தாம் வகுப்பைத் தாண்டாத அந்த சமூகத்திலிருந்து, முதன்முறையாக இரண்டு பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்லும் நிலையில், அந்த கிராமமே திருவிழா போல களைகட்டியுள்ளது. வாத்திய முழக்கங்கள், ஊர்வலம், ஆனந்தக் கண்ணீர் என அந்தப் பகுதி முழுவதும் மகிழ்ச்சியின் ஒலியால் நிறைந்தது.   புதுக்கோட்டையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், சிப்காட் அருகே அமைந்துள்ள காமராஜ் நகரில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இங்கு இந்து ஆதியன் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 76 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தில் இதுவரை எந்த பெண் குழந்தையும் பத்தாம் வகுப்பைத் தாண்டி உயர்கல்விக்கு செல்லாத நிலையில், லட்சுமி மற்றும் தமிழ்ச்செல்வி என்ற இரண்டு மாணவிகள் அந்தத் தடையை உடைத்துள்ளனர்.   வறுமை, சமூகப் பின்தங்குதல், சாதிச்சான்றிதழ் இல்லாமை போன்ற பல தடைகளை எதிர்கொண்டே இந்த மாணவிகள் கல்விப் பயணத்தை தொடர்ந்துள்ளனர். குறிப்பாக, சாதிச்சான்றிதழ் இல்லாததே இவர்களின் உயர்கல்விக்கு மிகப் பெரிய தடையாக இருந்தது. இருப்பினும், ‘எய்டு இந்தியா’ அமைப்பின் முயற்சி மற்றும் ஆதரவால், லட்சுமி மற்றும் தமிழ்ச்செல்வி இருவரும் தற்போது புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர்ந்து உள்ளனர்.   இந்த சமூகத்தில் ஆண்களில் தமிழரசன் என்ற ஒரே மாணவர் மட்டும், தன்னார்வ தொண்டு அமைப்பின் உதவியுடன் எம்.ஏ. படித்து வருகிறார். கல்வி குறித்து விழிப்புணர்வு இருந்தாலும், தேவையான ஆவணங்கள் இல்லாததால், இந்த கிராமத்தின் பெரும்பாலான குழந்தைகளின் கல்வி கனவுகள் பாதியிலேயே முடங்கி வந்தன. பல குடும்பங்களில் பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்புக்குள்ளாகவே திருமணம் செய்து வைக்கப்படும் நிலையும் நீண்ட காலமாக தொடர்ந்தது.   இந்த சூழலில், இரண்டு பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்பைத் தாண்டி கல்லூரி செல்லும் நிகழ்வு, அந்த சமூகத்திற்கே பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இதையடுத்து, மாணவிகளை ஊரே கூடி வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக அழைத்து சென்று வாழ்த்தியது அனைவரையும் நெகிழ வைத்தது. மாணவிகளின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட, அவர்களின் பெற்றோர்களும் உணர்ச்சிவசப்பட்டனர்.   கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமத்தில் கல்வி குறித்த அடிப்படை விழிப்புணர்வே இல்லை. அந்த நிலையில், ‘எய்டு இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ராஜா மற்றும் பிச்சம்மாள் ஆகியோர், கிராம மக்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன் விளைவாக, தற்போது இந்த கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வியை பயின்று வருகின்றனர்.   “கல்வி தனிநபரின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே மாற்றும் சக்தி கொண்டது” என்பதை இந்த இரண்டு மாணவிகள் நிரூபித்துள்ளனர். இவர்கள் பெற்றுள்ள இந்த வெற்றி, காமராஜ் நகரின் குழந்தைகளுக்கு புதிய பாதையையும், புதிய கனவுகளையும் உருவாக்கியுள்ளது. இந்த மாற்றத்தின் விதைகள் மேலும் விரிந்து வளர, அரசு மற்றும் சமூக அமைப்புகள் முன்வந்து ஆதரவு வழங்க வேண்டும் என்பதே கிராம மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Admin பிப்ரவரி 7, 2026 0
நீட் தேர்வு முறைகேட்டின் நிழல் மூளை: ரூ.40 லட்சம் வினாத்தாள் வியாபாரம் செய்த சஞ்சீவ் முகியா யார்?

நீட் தேர்வில் அடுத்தடுத்து வெளியாகும் முறைகேடு தகவல்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் சர்ச்சை என எழுந்த குற்றச்சாட்டுகள், தற்போது ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரை மையமாகக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளன. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் முகியா என்பவரே, இந்த நீட் தேர்வு முறைகேட்டின் பின்னணியில் முக்கிய மூளையாக செயல்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கப்பட்ட வினாத்தாள்கள் கிடைத்துள்ள முதற்கட்ட விசாரணை தகவல்களின் அடிப்படையில், நீட் தேர்வு வினாத்தாள் ஒன்றை ரூ.40 லட்சம் வரை வசூலித்து, தேர்வர்கள் சிலருக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கு முந்தைய நாளிலேயே, குறைந்தது 25 பேருக்கு வினா–விடைத்தாள்கள் சென்றடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான பணப்பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 20 ஆண்டுகளாக வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சஞ்சீவ் முகியா, பெயரளவில் ஒரு கல்லூரியில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றியதாக கூறப்பட்டாலும், உண்மையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வினாத்தாள் முறைகேடுகளையே தொழிலாக செய்து வந்திருக்கலாம் என காவல்துறை தெரிவிக்கிறது. அரசு தேர்வுகள், ஆசிரியர் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் என பல்வேறு தேர்வுகளில் அவர் தொடர்புடையதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2016 முதல் தொடரும் சர்ச்சை வரலாறு 2016ஆம் ஆண்டு பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிவு வழக்கில் சஞ்சீவ் முகியா கைது செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கில் இருந்து வெளியில் வந்தபோதும், அவர் மீண்டும் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மீது பழைய வழக்குகளையும் மீண்டும் தோண்டி எடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மகனும் சிறையில்… குடும்பமே சந்தேக வலையில் இந்த விவகாரத்தில் சஞ்சீவ் முகியாவின் மகன் சிவக்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவரான சிவக்குமார், பீகாரில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. தந்தை, மகன் என இருவரும் வினாத்தாள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், குடும்பம் முழுவதும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது. அரசியல் பின்னணி குறித்த கேள்விகள் சஞ்சீவ் முகியாவின் மனைவி மம்தா தேவி, 2020ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட்டவர். அவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, இந்த முறைகேட்டுக்கு அரசியல் பாதுகாப்பு இருந்ததா என்ற கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. ஒரு கும்பலா செயல்பட்டது? நீட் தேர்வு முறைகேட்டில் சஞ்சீவ் முகியா மட்டும் அல்லாமல், பேராசிரியர்கள், இடைத்தரகர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் அடங்கிய ஒரு பெரிய கும்பலே செயல்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவிக்கிறது. செல்போன் மூலம் வினா–விடைகள் பரிமாறப்பட்டதாகவும், அங்கிருந்தே முறைகேடு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. விரிவடையும் விசாரணை… அதிகரிக்கும் அதிர்ச்சி ஒவ்வொரு நாளும் வெளியாகும் புதிய தகவல்கள், நீட் தேர்வு முறைகேடு எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை வெளிப்படுத்தி வருகின்றன. விசாரணை வட்டத்தை விரிவுபடுத்தியுள்ள காவல்துறை, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் என உறுதியளித்துள்ளது.

Admin பிப்ரவரி 7, 2026 0
கோவை | 11ஆம் வகுப்பில் சேர்க்க மறுப்பு – ஆட்சியர் அலுவலகம் வரை சென்ற மாணவன்

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் சேர்க்க மறுப்பு கோவை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவனை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பில் சேர்க்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக புகார் மனு அளித்துள்ளார். அதே பள்ளியில் தொடர விருப்பம் கோவை கீரனத்தம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்ற மாணவன், கோவில்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து, அதே பள்ளியில் 11ஆம் வகுப்பையும் தொடர விரும்பி விண்ணப்பம் அளித்துள்ளார். ஆசிரியர்கள் பல்வேறு காரணங்கள் கூறி மறுப்பு ஆனால், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், பல்வேறு காரணங்களை கூறி மாணவனை 11ஆம் வகுப்பில் சேர்க்க மறுத்ததாக கூறப்படுகிறது. மாணவன் தனது பெற்றோருடன் சேர்ந்து பலமுறை பள்ளிக்கு சென்று கேட்டும், சேர்க்கை வழங்கப்படவில்லை என தெரிகிறது. கடைசியாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு இதனால் வேறு வழியின்றி, பாதிக்கப்பட்ட மாணவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகி மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “பள்ளி மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தாமல் தொடர அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், என்னை மட்டும் காரணமின்றி சேர்க்க மறுப்பது நியாயமல்ல. அதே பள்ளியில் 11ஆம் வகுப்பில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். கல்வி உரிமை கேள்விக்குறி? அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவனையே மேல்நிலை வகுப்பில் சேர்க்க மறுப்பது கல்வி உரிமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? மாணவன் அளித்த மனுவின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Admin பிப்ரவரி 7, 2026 0
சென்னை | படிப்பு வரவில்லை என கூறி மாணவனை வெளியேற்றிய அரசுப் பள்ளி.. அதிரவைக்கும் பின்னணி!

அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்திற்கு நேர்மாறான சம்பவம் அனைவருக்கும் கல்வி, கட்டாயக் கல்வி என பள்ளிக் கல்வித்துறை பேசும் நேரத்தில், கல்வியில் பின்வரிசையில் இருக்கும் மாணவர்களை நூதனமாக நீக்கும் நடவடிக்கை தலைநகர் சென்னையில் அரங்கேறி இருக்கிறது. 9ஆம் வகுப்பு மாணவன் – மாற்றுச் சான்றிதழுடன் தவிப்பு சென்னை பெருங்குடி அடுத்த கந்தன்சாவடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் (TC) பெற்ற 9ஆம் வகுப்பு மாணவன், தற்போது வேறு எங்கு படிப்பது என தெரியாமல் தவித்து வருகிறார். கற்கும் திறன் குறைவாக இருப்பதாகக் கூறிய ஆசிரியர்கள், மாணவனை ஐடிஐ-யில் சேர்த்துவிடுமாறு மடைமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் நடக்காத நடைமுறை? 100% தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, பொதுத் தேர்வுக்கு முந்தைய வகுப்பில் மாணவர்களை தேக்கி வைப்பதும், டி.சி. கொடுத்து வெளியேற்றுவதும் அரசுப் பள்ளிகளில் வழக்கமாக நடைபெறாத ஒன்று. ஆனால், இதை கந்தன்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளி செய்ததாக மாணவனின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். 100% தேர்ச்சி இலக்கே காரணமா? கற்றலில் முன்னேற்றம் உள்ள மாணவர்களை மட்டும் வைத்துக்கொண்டு, 10ஆம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சி இலக்கை எட்டும் நோக்கில், இந்த மாணவன் வெளியேற்றப்பட்டதாகும் என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருகிறது. கல்வித் திட்டங்களின் நோக்கம் என்ன? கல்வியின் அவசியம் கருதி, கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் அறிவொளி இயக்கம் முதியோர் கல்வி இல்லம் தேடி கல்வி என பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தச் சம்பவம் அந்த முயற்சிகளுக்கே கேள்விக்குறியாக அமைந்துள்ளது. பெற்றோரின் வேதனை மாணவனின் பெற்றோர் கூறுகையில், “படிப்பு வரலன்னு சொல்லி, ஐடிஐ-ல சேத்துவிடுங்கன்னு சொல்லி டி.சி. வாங்க வச்சாங்க. இப்போ ஐடிஐக்கு போனா அட்மிஷன் முடிஞ்சிருச்சுன்னு சொல்றாங்க. ஐடிஐ-ல கூப்பிட்டா உண்டு… இல்லன்னா அவ்ளோதான்” என வேதனையுடன் தெரிவித்தார். கல்வி இடைநிற்றல் – மிகப் பெரிய சமூகப் பிரச்சனை ஒருகாலத்தில் மாணவர்கள் இடைநிற்றல் கூடாது என்பதற்காக, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தி ஊக்குவித்து அழைத்துவந்த நிலை மறைந்து, இன்று குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றும் நிலை உருவாகியிருப்பது மிகப் பெரிய கொடுமை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசு தலையீடு அவசியம் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, அந்த மாணவனின் கல்வி தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Admin பிப்ரவரி 7, 2026 0
திருப்பூர்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேக பேருந்து

ஊராட்சி மன்றத் தலைவர் தனிநிதியில் ஏற்பாடு – மாணவிகள் மகிழ்ச்சி திருப்பூர் மாவட்டம் படியூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளை பாதுகாப்பாகவும், நேரத்திற்கு பள்ளிக்கு அழைத்து செல்லவும் பிரத்யேக பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் தனது சொந்த நிதியில் இருந்து இந்த பேருந்தை வழங்கியுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் பயண சிரமம் படியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும், அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 200-க்கும் அதிகமான மாணவ மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பேருந்து வசதி போதிய அளவில் இல்லாததால், சில மாணவர்கள் பெற்றோர் உதவியுடன், சிலர் சைக்கிளிலும், சிலர் நடந்தும் பள்ளிக்கு சென்று வந்துள்ளனர். குறிப்பாக மாணவிகள் மாலை நேரங்களில் தனியாக கிராமங்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தி வந்தது. ஒரே அரசு பேருந்து – தொடர்ந்த கோரிக்கை இந்த பள்ளி வழியாக ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வந்ததால், குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்வதும், வீடு திரும்புவதும் மாணவர்களுக்கு சிரமமாக இருந்தது. இதனால் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன. ஊராட்சி தலைவர் எடுத்த முன்னெடுப்பு இந்த நிலையில், படியூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம், அரசுப் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தனது சொந்த நிதியில் இருந்து சுமார் 16 லட்சம் ரூபாய் செலவில் பள்ளிக்கென தனி பேருந்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பேருந்து, பள்ளி மாணவர்களை காலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீட்டிற்கும் அழைத்து செல்லும் வகையில் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு வசதிகளுடன் பேருந்து பேருந்தில் ஜிபிஎஸ் வசதி, கண்காணிப்பு கேமராக்கள், வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்ட பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. மேலும், ஓட்டுநர் மற்றும் மாணவர்களை ஏற்றி இறக்கும் உதவியாளர் உள்ளிட்ட அனைத்து பராமரிப்புகளையும் ஊராட்சி மன்றத் தலைவரே பொறுப்பேற்க இருப்பதாக உறுதி அளித்துள்ளார். “மாணவிகள் தைரியமாக படிக்க முடியும்” இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் கூறுகையில், “இந்த பேருந்து சேவையால் கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாலை நேர சிறப்பு வகுப்புகளிலும் மாணவிகள் அச்சமின்றி கலந்து கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடிவதால் கல்வி பாதிக்கப்படாது” என தெரிவித்தார். மாணவிகள் மகிழ்ச்சி பேருந்து சேவையால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். “தனியார் பள்ளி மாணவர்கள் பேருந்தில் செல்வதை ஏக்கத்துடன் பார்த்த காலம் மாறிவிட்டது. இனி அரசு பேருந்தில் கூட்ட நெரிசலில் பயணிக்கவும், நடந்தும் பள்ளிக்கு வரவும் வேண்டிய நிலை இல்லை” என மாணவிகள் தெரிவித்தனர். கல்வி இடைநிற்றல் தவிர்ப்பு இந்த பேருந்து வசதி மூலம் கிராமப்புற மாணவர்களின் கல்வி இடைநிற்றல் தவிர்க்கப்படும் என்றும், பாதுகாப்பும் கல்வி நேரமும் அதிகரிக்கும் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற திட்டங்களை அரசு முன்வந்து மற்ற கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Admin பிப்ரவரி 7, 2026 0
காயமடைந்த மாணவர்கள் விவகாரம் – பெற்றோர் முற்றுகையால் பரபரப்பு

சேலம்: அரசு பள்ளியில் மாணவர் மோதல் சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே அவ்வப்போது குழுக்களாக பிரிந்து மோதல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், நேற்று (15ஆம் தேதி) மதிய வேளையில், வகுப்பு நடைபெறும் நேரத்திலேயே 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இந்த மோதலில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து கேள்வி மோதலில் காயமடைந்த மாணவர்கள், இன்று தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்து உதவி தலைமை ஆசிரியரை சந்தித்து விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது, உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் தொழிலியல் ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் உரிய விளக்கம் அளிக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். தலைமை ஆசிரியர் அறை முன்பு முற்றுகை இதனைத் தொடர்ந்து, பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர் அறையின் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். தங்களது குழந்தைகளை தாக்கிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு எடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தொடர்புடையவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எழுத்துப்பூர்வ உறுதி – முற்றுகை வாபஸ் பேச்சுவார்த்தையின் முடிவில், சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் இருந்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என எழுத்துப்பூர்வமாக உறுதி பெற்றுக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Admin பிப்ரவரி 7, 2026 0
மதுரை: “தவறான விளக்கங்களால் அடிப்படை கல்வி பாதை மாறியது”

ஆன்மீகம் – கல்வி பிரிவால் சமூகத் திசை திரும்பியுள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்மீகம் மற்றும் கல்வி ஒன்றாக இணைந்திருந்த இந்திய பாரம்பரியம், தவறான விளக்கங்களும் அரசியல் சூழலும் காரணமாக சிதைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, சொந்த நாட்டிலேயே நாமே அந்நியர்களாக மாறியுள்ளோம் என்றும் அவர் கூறினார். திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி – பரிசளிப்பு விழா மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராசர் கலைக் கல்லூரியில், கருமுத்து தியாகராச செட்டியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் தின விழா மற்றும் கருமுத்து கண்ணன் நினைவு திருவாசகம் ஒப்புவித்தல் போட்டிக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, திருவாசகம் பாடி வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் பாடச் சொல்லி, அதனை ரசித்தும் கேட்டார். “இளம்தலைமுறை திருவாசகம் படிப்பது மகிழ்ச்சி” விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இளம்தலைமுறையினர் திருவாசகம் படிப்பதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்று தெரிவித்தார். மேலும், “இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் திட்டமிட்டு பிரித்தனர். நம்மை நமது பண்பாடு, கல்வி, ஆன்மீகம் மற்றும் வாழ்க்கை முறைகளில் பின்தங்கச் செய்தனர்” என்று அவர் கூறினார். “கல்வி வணிகமாக மாற்றப்பட்டுள்ளது” தமிழகத்தின் உயர் கல்வி சூழலைக் குறிப்பிட்டு பேசிய ஆளுநர், “தமிழ்நாட்டில் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் போலியான பேராசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். சில பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் 30 கல்லூரிகளுக்கு பாடம் நடத்துவது அதிர்ச்சியளிக்கிறது” என்று குற்றம்சாட்டினார். மேலும், “பல கல்லூரிகளில் கல்வியை விட பணமே முதன்மையாக மாறியுள்ளது. வணிக நோக்கத்திற்காகவே கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார். “தமிழகம் ஆன்மீகத்தின் தலைநகரம்” தமிழகத்தின் ஆன்மீக மரபை நினைவூட்டிய ஆளுநர், “தமிழகம் பாரத நாட்டின் ஆன்மீகத் தலைநகரமாக இருந்தது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற தலைசிறந்த ஆன்மீகவாதிகள் தமிழ் மண்ணில்தான் தோன்றினர்” என்றார். திருமுறை, நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்கள், கல்வி பயிலாத மக்களுக்கும் ஆன்மீகத்தை எடுத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். “பிரிட்டிஷ் ஆட்சியில் ஆவணங்கள் அழிக்கப்பட்டன” “ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக திருவாசகம் போன்ற இலக்கியங்கள் நாடு முழுவதும் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவை முறையாக அழிக்கப்பட்டன” என்று கூறிய ஆளுநர், 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உலகின் முன்னணி நாடாக இருந்ததாகவும் நினைவூட்டினார். “சனாதன தர்மம் சமூக முன்னேற்றத்துக்கானது” உரையின் நிறைவில் அவர், “சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்கள் சமூகத்தையும் நாட்டையும் மேம்படுத்த நினைப்பார்கள். திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்கள் மனிதனை உயர்த்தும் சக்தி கொண்டவை” என்று தெரிவித்தார்.

Admin பிப்ரவரி 7, 2026 0
அரசுப் பள்ளிக்கு இலவசமாக பணிசெய்து கொடுத்த கொத்தனார் – நெகிழ்ச்சி சம்பவம்

உசிலம்பட்டி: ‘என் மகனை படிக்கவச்ச இடம் இது’ மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, தனது மகன் படித்த அரசுப் பள்ளிக்காக கூலி வாங்காமல் மராமத்து வேலை செய்து கொடுத்த கொத்தனாரின் செயல், அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த மனிதநேயச் செயலுக்கு மாவட்ட ஆட்சியரும் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். எழுமலை அரசு பள்ளியில் மராமத்து தேவை உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடத்தில், பல்வேறு மராமத்து பணிகள் தேவைப்பட்டு வந்துள்ளன. இதையறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தனபால் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன், அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவனின் தந்தையும், உத்தப்புரத்தைச் சேர்ந்த கொத்தனாருமான அழகு முருகன் என்பவரை மராமத்து பணிகளை பார்க்குமாறு கேட்டுக் கொண்டனர். மூன்று நாட்கள் இலவச சேவை அதன்பேரில், அழகு முருகன் பள்ளிக்கு வந்து மூன்று நாட்கள் தொடர்ந்து பள்ளியில் உள்ள அனைத்து மராமத்து பணிகளையும் செய்து முடித்துள்ளார். பணிகள் முடிந்த பிறகு, ஆசிரியர்கள் கூலி வழங்க முனைந்தபோது, “எனக்கு கூலி வேண்டாம். இந்த பள்ளிக்காக இலவசமாக செய்கிறேன்” என்று கூறி பணத்தை வாங்க மறுத்துள்ளார். ‘இந்த பள்ளி என் மகனுக்கு நிறைய செய்துள்ளது’ ஆசிரியர்கள் வலியுறுத்தியும் கூலியை ஏற்க மறுத்த அழகு முருகன், “இந்த பள்ளி என் மகனுக்கு எவ்வளவோ செய்துள்ளது. அந்த நன்றிக்கு என்னால் முடிந்த சிறிய உதவியாக இது இருக்கட்டும்” என்று தெரிவித்தார். மகனின் கல்வி பயணம் இது குறித்து அழகு முருகன் கூறுகையில், “எனது மகன் கடந்த ஆண்டு இந்தப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு, தற்போது திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து வருகிறார். அவனது கல்வி வளர்ச்சிக்கு காரணமான பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் கூலி வாங்காமல் வேலை செய்தேன். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது” என்றார். ஆசிரியர்கள் நெகிழ்ச்சி பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “எங்கள் பள்ளி மாணவர்களின் மீது மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அழகு முருகன் அவர்களின் மகன் பீமனும் எங்கள் முன்னாள் மாணவர். அவர் பிளஸ் 2 முடித்த பிறகும் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து பூச்செடிகள், மரங்களை நட்டு பராமரித்தார். இப்போது அவரது தந்தை பணம் வாங்காமல் பள்ளியில் வேலை செய்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது” என்றனர். மாவட்ட ஆட்சியர் பாராட்டு இந்த மனிதநேயச் செயலை அறிந்த மாவட்ட ஆட்சியர், அழகு முருகனை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். “ஆட்சியர் வழங்கிய இந்த கௌரவம், எங்கள் பள்ளிக்கே கிடைத்த பரிசு” என்று ஆசிரியர்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.

Admin பிப்ரவரி 7, 2026 0
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு, இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் மதுரையைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோர் இந்த உயரிய விருதுக்கு தேர்வாகியுள்ளனர். நாடு முழுவதும் இருந்து 50 பேர் தேர்வு தேசிய நல்லாசிரியர் விருதுக்காக, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடமிருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் இருந்து கல்வித்துறையில் சிறப்பான சேவை புரிந்த 50 ஆசிரியர்கள் இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து கோபிநாத் – முரளிதரன் தேர்வு அந்த வகையில், வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோபிநாத், மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முரளிதரன் ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 5-ம் தேதி விருது வழங்கல் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களிடமிருந்து இருவரும் விருதைப் பெற உள்ளனர். தேசிய நல்லாசிரியர் விருதின் கீழ், 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பாராட்டுகள் குவிப்பு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் இந்த தேசிய விருதைப் பெற உள்ள நிலையில், அவர்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் கோபிநாத் மற்றும் முரளிதரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Admin பிப்ரவரி 7, 2026 0
விவசாய கூலி குடும்பத்தில் இருந்து மருத்துவக் கல்லூரி வரை – அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கிய மூன்று டாக்டர்கள்!

தருமபுரி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில், விவசாயக் கூலி தொழிலாளர்களாக வாழும் தம்பதியரின் மூன்று பிள்ளைகளும் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பது, அரசுப் பள்ளிகளின் கல்வி சக்தியையும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக கவனம் பெற்றுள்ளது. தருமபுரி மாவட்டம் தண்டுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதம்மாள் – அவரது கணவர் ஆகியோர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். குறைந்த வருமானம், எளிய வாழ்க்கை என்ற நிலையிலும், கல்வியே தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் என்ற உறுதியுடன், மூன்று பிள்ளைகளையும் அரசு பள்ளியிலேயே படிக்க வைத்தனர். “மருத்துவராக்க வேண்டும்” – பெற்றோரின் கனவு இந்த தம்பதியரின் மூத்த மகள் சந்தியா சிறுவயதிலிருந்தே படிப்பில் திறமை காட்டியதை கவனித்த பெற்றோர், அவரை மருத்துவராக்க வேண்டும் என்ற கனவை வளர்த்தனர். 2019ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த சந்தியா, முதல் முறையாக நீட் தேர்வெழுதியபோது போதிய மதிப்பெண் பெற முடியாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அதன் பின்னர் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்த சந்தியாவுக்கு, தமிழக அரசு கொண்டு வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இரண்டாம் முயற்சியில் மருத்துவக் கனவு நனவானது மனதை தளர விடாமல் மீண்டும் நீட் தேர்வுக்கு தயாரான சந்தியா, 2021–22 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்று, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பைப் பெற்றார். தற்போது அவர் அங்கு மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவியாகப் பயின்று வருகிறார். அண்ணியின் வழிகாட்டுதலில் தம்பிகள் மூத்த சகோதரியான சந்தியாவின் சாதனை, அவரது தம்பிகள் ஹரிபிரசாத் மற்றும் சூரிய பிரகாஷுக்கு பெரும் ஊக்கமாக அமைந்தது. சந்தியா வழங்கிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலால், ஹரிபிரசாத் 2023–24 கல்வியாண்டில் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ளார். அதேபோல் இளைய மகன் சூரிய பிரகாஷும் நீட் தேர்வில் வெற்றி பெற்று, கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை தொடங்கியுள்ளார். ஆசிரியர்களின் சொந்த செலவில் நீட் பயிற்சி இந்த குடும்பத்தின் மூன்றாவது வெற்றிக்கு பின்னணியாக, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த சூரிய பிரகாஷுக்கு, குடும்பத்தின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, நீட் பயிற்சிக்கான கட்டணத்தை ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் ஏற்று படிக்க வைத்துள்ளனர். அரசுப் பள்ளிகள் – நம்பிக்கையின் வெளிச்சம் “எட்டாக் கனியாக இருந்த மருத்துவப் படிப்பு, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் எங்களுக்குக் கிட்டிய கனியாக மாறியுள்ளது” என்று இந்த மாணவர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள், அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பது, அரசுப் பள்ளிகள் சாமானிய மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக மாறி வருவதை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், மாணவர்களை சொந்த பிள்ளைகள்போல் கருதி உழைக்கும் ஆசிரியர்களால் தான், அரசுப் பள்ளிகள் இன்று நம்பிக்கையின் ஒளியாக மாறி வருவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Admin பிப்ரவரி 7, 2026 0
புதிய கல்விக் கொள்கை பெயரில் அழுத்தம் – மத்திய அரசு அரசியல் செய்கிறது: அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு

“மாநிலத்துக்கான கல்வி நிதியை விடுவிப்பதற்குப் பதிலாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது” என மத்திய பாஜக அரசின் மீது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றம்சாட்டியுள்ளார். அமரர் அன்பில் பொய்யாமொழியின் 25-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சியில் உள்ள திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 573 கோடி ரூபாய் இன்னும் விடுவிக்கப்படவில்லை அப்போது அவர் கூறியதாவது, “அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பங்கீடு தொகையான 573 கோடி ரூபாய் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் முன்பே மத்திய அரசை வலியுறுத்தி விட்டு சென்றுள்ளார். மேலும், நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் தமிழக எம்பிகள் அனைவரும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினோம். மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தெளிவாக கூறினோம்.” “தேசிய கல்விக் கொள்கை ஏற்றால் தான் நிதி” – மத்திய அரசு நிபந்தனை “ஆனால், மத்திய அரசு ‘தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிதி வழங்க முடியும்’ என்று கூறுகிறது. குறிப்பாக, ‘புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாக கொண்ட பிஎம்ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் மாநில அரசு இணைய வேண்டும்’ என அழுத்தம் கொடுக்கிறது. இதற்கும், அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேசிய கல்விக் கொள்கை 2020ஆம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் அனைவருக்கும் கல்வி திட்டம் 2018ஆம் ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டுவிட்டது” என்றார். மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது “இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல், உடனடியாக மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை விடுவிக்க வேண்டும். நிதியை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதில் எந்த மாற்றமும் இல்லை” என்று அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். ஆசிரியர் சம்பளத்தில் பாதிப்பு இல்லை மேலும் அவர் கூறுகையில், “மத்திய அரசு நிதி வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை சமாளிக்க தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்றார்.

Admin பிப்ரவரி 7, 2026 0
சினிமா குடும்பங்களின் கல்விக்கான கரம்.. இயக்குநர்கள் வாரிசுகளுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆண்டு உதவி

தமிழ்த் திரையுலகில் பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வரும் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் குடும்பங்களை ஆதரிக்கும் வகையில், அவர்களின் குழந்தைகளின் கல்விக்காக ஆண்டுதோறும் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். திரையுலகில் மறைமுகமாக உழைக்கும் பலரின் வாழ்க்கைச் சவால்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு, சினிமா வட்டாரத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது. ’3’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தொடர்ந்து ’வை ராஜா வை’, ’லால் சலாம்’ போன்ற படங்களை இயக்கி தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர். இந்த நிலையில், முறையான வருமானம் இன்றி தவிக்கும் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் குழந்தைகள் கல்வி தொடர முடியாமல் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில், இந்த கல்வி நிதியுதவி திட்டத்தை அவர் தொடங்கியுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான நிதி வழங்கல் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2024ஆம் ஆண்டுக்கான கல்வி நிதியை ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமாரிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் சங்க செயலாளர் பேரரசு, பொருளாளர் சரண் மற்றும் பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிதி, கல்வி உதவி தேவைப்படும் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு சங்கத்தின் மூலம் முறையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “உழைப்பின் பின்னால் இருக்கும் குடும்பங்களை மறக்கக் கூடாது” திரைப்படத் துறையில் வெற்றியும் புகழும் சிலருக்கே கிடைத்தாலும், அதன் பின்னால் எண்ணற்ற இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் கடும் பொருளாதார சிரமங்களுடன் போராடி வருவதாகவும், அவர்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவது வேதனையளிப்பதாகவும் திரையுலகினர் கூறுகின்றனர். அந்த வகையில், கல்வி வழியே அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பு உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு, சமூக பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. இந்த நிதியுதவி திட்டம், எதிர்காலத்தில் மேலும் விரிவடையலாம் என்ற எதிர்பார்ப்பும் திரையுலக வட்டாரத்தில் நிலவுகிறது.

Admin பிப்ரவரி 7, 2026 0
5–8 வகுப்புகளில் ‘ஃபெயில்’ நடைமுறை: கிராமப்புற மாணவர்களுக்கு பின்னடைவு – ராமதாஸ் கடும் விமர்சனம்

மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டாயத் தேர்ச்சி (ஆல்-பாஸ்) முறையை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த முடிவு கல்வித்தரத்தை உயர்த்தும் பெயரில் எடுக்கப்பட்டாலும், நடைமுறையில் அது கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், “5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தோல்வியடைந்தால், அவர்கள் ‘ஃபெயில்’ எனக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தோல்வியடைந்தால், அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்பட மாட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. “கல்வி வாய்ப்புகளை பறிக்கும் முடிவு” இந்த அறிவிப்புக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த முடிவை “மிகவும் தவறானது” எனக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதையும், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகள் அதிக அளவில் சேர்க்கப்படுவதை நினைவூட்டியுள்ளார். 5 அல்லது 8ஆம் வகுப்பில் தேர்ச்சி வழங்கப்படவில்லை என்றால், அந்த மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தும் அபாயம் அதிகம் என்றும், இதைத் தடுப்பதற்காகவே எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற கொள்கை உருவாக்கப்பட்டது என்றும் அவர் விளக்குகிறார். தமிழ்நாட்டில் நடந்த போராட்டம் நினைவூட்டல் தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அப்போதைய தமிழக அரசு அறிவித்தபோது, அதற்கு எதிராக பாமக சார்பில் மாநிலம் முழுவதும் அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டது என்பதையும் ராமதாஸ் நினைவூட்டியுள்ளார். அந்தப் போராட்டத்துக்குப் பிறகு, அன்றைய பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அனுபவம், இவ்வகைத் தேர்ச்சி முறை ஏழை மாணவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கான உதாரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “எட்டாம் வகுப்பு வரை ஆல்-பாஸ் தொடர வேண்டும்” கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்கள் முழுமையான கல்விச் சுதந்திரம் பெறும் வரை, எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் முறை தொடர வேண்டும் என்பதே பாமகவின் உறுதியான நிலைப்பாடு என ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளிலும் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி முறை தொடரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு பொருந்தாது – அமைச்சர் விளக்கம் இதற்கிடையே, மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு பொருந்தாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெளிவுபடுத்தியுள்ளார். கல்வி உரிமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தற்போதைய முறையே தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Admin பிப்ரவரி 7, 2026 0
அரசியல் தலையீடுகளால் சிதறும் பல்கலைக்கழகத் தன்னாட்சி | உயர் கல்வி எதிர்கொள்ளும் பேராபத்து

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உயர் கல்வி நிறுவனங்கள் அறிவை உருவாக்கவும், விமர்சன சிந்தனையை வளர்க்கவும், சமூக முன்னேற்றத்திற்கு வழிகாட்டவும் உருவாக்கப்பட்டவை. ஆனால், அந்த அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அரசின் நேரடி மற்றும் மறைமுக தலையீடுகள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் அதிகரித்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடும் கவலை வெளியிட்டுள்ளார். கல்வி நிறுவனங்களின் சுதந்திர செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் அரசின் உத்தரவுகள், அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளுக்கு நேரான அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், பல்கலைக்கழகங்கள் எதை கற்பிக்க வேண்டும், யாரை சேர்த்துக்கொள்ள வேண்டும், யார் கற்பிக்க வேண்டும், எந்த வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்க முடியாது என்பதே உலகளாவிய கல்வி மரபு. ஆனால் இந்தியாவில் இந்த அடிப்படை கோட்பாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். ஹார்வர்டும் இந்தியாவும்: தன்னாட்சியில் வித்தியாசம் பல்கலைக்கழக தன்னாட்சியின் அவசியத்தை விளக்க அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை ப.சிதம்பரம் எடுத்துக்காட்டுகிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசியல் தலையீடு செய்தபோது, அதனை ஹார்வர்ட் தலைவர் ஆலன் கார்பர் தெளிவாக மறுத்தார். இதன் விளைவாக கூட்டரசு அரசு மாபெரும் நிதியுதவியை நிறுத்தியபோதும், பல்கலைக்கழகம் தன் நிலைப்பாட்டில் இருந்து பின்னடையவில்லை. அதே நேரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகம் அரசின் உத்தரவுகளுக்கு உடன்பட்டதை அவர் ஒப்பீடாக முன்வைக்கிறார். இந்த உதாரணம், பல்கலைக்கழக தன்னாட்சி எவ்வளவு முக்கியமானது என்பதையும், அது இல்லையெனில் கல்வியின் தரம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. இந்திய பல்கலைக்கழகங்களுக்கு ஏன் தன்னாட்சி இல்லை? யுஜிசி தரவுகளின்படி இந்தியாவில் 1,074 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை உண்மையான தன்னாட்சி இல்லாமல் இயங்குகின்றன. இதற்குக் காரணம் 1956ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையச் சட்டம். ஆரம்பத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம், காலப்போக்கில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் யுஜிசியின் ஆதிக்கத்தை உறுதி செய்யும் கருவியாக மாறிவிட்டதாக ப.சிதம்பரம் விமர்சிக்கிறார். ஆசிரியர் நியமனம், பாடத்திட்ட வடிவமைப்பு, ஆராய்ச்சி திசைகள், தேர்வு முறைகள், நுழைவுத் தேர்வுகள் என அனைத்தையும் மையப்படுத்தி கட்டுப்படுத்தும் அமைப்பாக யுஜிசி மாறியுள்ளது. இதனால் பல்கலைக்கழகங்களின் சுய தீர்மான உரிமை முற்றிலும் குன்றியுள்ளதாக அவர் கூறுகிறார். உயர் கல்வியின் தரம் ஏன் சரிவடைகிறது? இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழகமும் உலகின் முதல் 100 பல்கலைக்கழக பட்டியலில் இடம் பெறாதது தற்செயலான விஷயம் அல்ல என ப.சிதம்பரம் குறிப்பிடுகிறார். மத்திய பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஐஐடி, என்.ஐ.டி போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களுக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாக நாடாளுமன்ற குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவில் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர் இன்னும் டாக்டர் சி.வி. ராமன் மட்டுமே என்பதும், உயர் கல்வி ஆராய்ச்சித் துறையின் பின்னடைவைக் காட்டும் உண்மை என அவர் சுட்டிக்காட்டுகிறார். கல்வி வளாகங்களில் சுதந்திரம் சிதைவு பல்கலைக்கழக வளாகங்களில் கருத்து சுதந்திரம், அமைதி மற்றும் அறிவாற்றல் விவாத சூழல் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் ப.சிதம்பரம் கூறுகிறார். பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தாக்குதல், அச்சுறுத்தல், அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வருவது கல்வியின் அடிப்படை ஆவியை சிதைக்கிறது. மேலும், தொலைநிலைக் கல்வி போன்ற வாய்ப்புகளை யுஜிசி விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள் குறைக்கும் நிலையில், கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் சுருங்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கிறார். தீர்வு என்ன? பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தின் தற்போதைய அமைப்பு முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு, பல்கலைக்கழகங்களுக்கு உண்மையான தன்னாட்சி, அரசியல் தலையீடுகளற்ற நிர்வாகம் உறுதி செய்யப்பட வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்துகிறார். அரசு நிதியுதவியுடன் மட்டுமல்லாமல், அறக்கட்டளைகள் மற்றும் முன்னாள் மாணவர் ஆதரவுடன் பல்கலைக்கழகங்கள் சுயமாக வளரக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு. இல்லையெனில், இந்திய உயர் கல்வி அமைப்பு சுதந்திரமற்ற, வணிக நோக்கமுள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குள் சிக்கி, அறிவு வளர்ச்சியின் மையமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் வெறும் பட்டம் வழங்கும் நிலையங்களாக மாறிவிடும் என அவர் எச்சரிக்கையுடன் முடிவுறுத்துகிறார்.

Admin பிப்ரவரி 7, 2026 0
இன்றைய காலை முக்கிய செய்திகள் | கனமழை முதல் கல்வியில் வரலாற்றுச் சாதனை வரை

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை: சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. குடியாத்தத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நெற்பயிர்கள் சேதம்: செங்கம் அருகே கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. வானிலை முன்னறிவிப்பு: தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு. ஆயுஷ்மான் பாரத் குறித்து பிரதமர் பெருமிதம்: உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் என உலக சுகாதார சபை கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி தெரிவித்தார். மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு: வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பக்கிங்காம் கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகளையும் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை. அரசியல் விமர்சனம்: நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறிய முதல்வர் தற்போது டெல்லி செல்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம். “வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?” என சமூக வலைதளத்தில் பதிவு. அதிமுக – ஆதவ் அர்ஜூனா வாக்குவாதம்: அதிமுகவுக்கு மக்கள் ஏற்கெனவே தண்டனை வழங்கிவிட்டனர் என ஆதவ் அர்ஜூனா விமர்சனம். தங்கள் கட்சியை பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை என அதிமுக பதிலடி. மின் கட்டணம் குறித்து அமைச்சர் விளக்கம்: வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. இலவச மின்சாரச் சலுகைகள் தொடரும் எனவும் உறுதி. பஞ்சாப் பொற்கோயில் விவகாரம்: பொற்கோயிலில் வான் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டதாக வெளியான தகவலை ராணுவம் திட்டவட்டமாக மறுத்தது. தங்கக் கடத்தல் வழக்கு: கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. மற்றொரு வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் வெளியே வருவதில் தாமதம். டாஸ்மாக் வழக்கு: டாஸ்மாக் வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு. வரும் 22ஆம் தேதி வழக்கு பட்டியலிடப்படும் என பதிவாளர் தகவல். சிறை விதிகளில் திருத்தம்: சிறைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு கூடாது. கைதிகளிடம் சாதி குறித்து கேட்கத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு. சிவகங்கை கல் குவாரி விபத்து: 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் குவாரி உரிமையாளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு. கொரோனா குறித்து விளக்கம்: பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தல். கொரோனாவும் பிற வைரஸ்களை போல தொடரும் என விளக்கம். கல்வியில் வரலாற்றுச் சாதனை: நாட்டில் முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலமாக மிசோரம் அறிவிப்பு. முதல்வர் லால்டுஹோமா பெருமிதம். ஐபிஎல் செய்திகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது. பெங்களூருவில் நடைபெற இருந்த ஆர்சிபி – சன் ரைசர்ஸ் போட்டி மழை காரணமாக லக்னோவுக்கு மாற்றம். போட்டி வரும் 23ஆம் தேதி நடைபெறும்.

Admin பிப்ரவரி 7, 2026 0
வெளிநாட்டு கல்வி பயணத்தில் இந்தியாவில் முதலிடம்: சண்டிகர் மாணவர்கள் சாதனை

இந்தியாவில் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் யூனியன் பிரதேசமான சண்டிகர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. யுடாய் (UIDAI) மக்கள்தொகை பதிவுகள் மற்றும் மாநில கடவுச்சீட்டு அலுவலகங்கள் மாணவர்களுக்கு வழங்கிய பாஸ்போர்ட் எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட தரவுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. 2016 முதல் 2021 வரை உள்ள ஐந்து ஆண்டு காலப்பகுதியில், சண்டிகரில் ஒரு லட்சம் மாணவர்களில் சராசரியாக 10,146 பேர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை, நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. இதன் மூலம், இந்திய அளவில் வெளிநாட்டு கல்வி விருப்பத்தில் சண்டிகர் முன்னணியில் இருப்பது வெளிப்படையாகியுள்ளது. இந்த பட்டியலில் பஞ்சாப் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அங்கு ஒரு லட்சம் மாணவர்களுக்கு 869 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது; இங்கு இந்த விகிதம் 851 மாணவர்கள் ஆக பதிவாகியுள்ளது. தலைநகரம் என்பதால் கல்வி மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், சண்டிகரின் எண்ணிக்கையை டெல்லி எட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். தென் மாநிலங்களைப் பொருத்தவரை, ஆந்திரப் பிரதேசம் முன்னிலையில் உள்ளது. அங்கு ஒரு லட்சம் மாணவர்களில் 524 பேர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயின்றுள்ளனர். இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கு 211 மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதேபோல், தெலங்கானாவில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்து, ஒரு லட்சத்திற்கு நான்கு மாணவர்கள் மட்டுமே வெளிநாட்டு கல்வியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். UIDAI மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களையும், மாநில கடவுச்சீட்டு அலுவலகங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் எண்ணிக்கைகளையும் ஒப்பிட்டு இந்த தரவுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையிலான கல்வி விழிப்புணர்வு, பொருளாதார நிலை, வெளிநாட்டு கல்வி ஆலோசனை அமைப்புகள் மற்றும் இடம்பெயர்வு கலாச்சாரம் போன்றவை இந்த வித்தியாசங்களுக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என கல்வி நிபுணர்கள் கூறுகின்றனர்.

Admin பிப்ரவரி 7, 2026 0
Popular post
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ ஒப்புதல்   தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அக்கட்சி கோரியிருந்த ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது.   தமிழக வெற்றிக் கழகம் தற்போது பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் அங்கீகாரம் பெறாத கட்சியாகும். இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வகையில், தேர்தல் ஆணையம் பொதுச் சின்னம் வழங்கியுள்ளது.   தேர்தல் ஆணையத்திடம் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 10 விருப்பச் சின்னங்களில் ‘விசில்’ முதலிடத்தில் இடம்பெற்றிருந்தது. கட்சித் தலைவர் விஜய் விரும்பிய சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளதால், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.   ஒரு புதிய அரசியல் கட்சிக்கு மாநில அளவில் ஒரே சின்னம் வழங்கப்படுவது, அந்தக் கட்சியின் அடையாளத்தை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்ல உதவும் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. ‘விசில்’ சின்னம் எச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் மாற்றத்தைக் குறிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான குரல் அல்லது புதிய அரசியல் தொடக்கத்தின் குறியீடாக இதனை த.வெ.க. பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.   இதுகுறித்து கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், “எங்கள் தலைவர் விரும்பிய விசில் சின்னமே கிடைத்துள்ளது. இது கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய ஆரம்ப கட்டமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.   இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும், அவர்கள் பயன்படுத்தி வந்த ‘டார்ச் லைட்’ சின்னம் பொதுச் சின்னமாக மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் சின்னங்களும் இப்போதே கவனம் பெறத் தொடங்கியுள்ளன.

AI போட்டியில் ஆப்பிளின் ‘மாஸ்டர் பிளான்’

2026-ல் முழுமையாக அப்டேட் ஆகும் ஐபோன்கள்… விபரம் என்ன? செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய அளவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அந்த போட்டியை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரிய திட்டத்தை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2026-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு AI அடிப்படையிலான மிக முக்கியமான திருப்புமுனை ஆண்டாக அமையக்கூடும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஐ போட்டியில் ஏன் பின்னடைவை சந்தித்த ஆப்பிள்? ஓபன் ஏஐ, கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலேயே ஏஐ துறையில் தீவிரமாக கால்பதித்துவிட்டன. ChatGPT Google Gemini Microsoft Copilot போன்ற ஏஐ சேவைகள் மிக வேகமாக வளர்ச்சி கண்டன. இதற்குப் பின்னணியாக, ஆப்பிள் 2024-ஆம் ஆண்டில்தான் ‘Apple Intelligence’ என்ற தனது ஏஐ தளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இதனால், போட்டியாளர்களை விட ஆப்பிள் சற்றே தாமதமாக ஏஐ பயணத்தை தொடங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன. Apple Intelligence: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? Apple Intelligence மூலம், Writing Tools Clean Up (புகைப்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்கும் வசதி) On-device AI processing போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், கூகுள் ஜெமினி ChatGPT Copilot போன்ற ஏஐ மாடல்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிளின் ஏஐ அம்சங்கள் அதே அளவிலான திறனை வழங்கவில்லை என பல தொழில்நுட்ப விமர்சகர்கள் கூறினர். புதுப்பிக்கப்பட்ட Siri – இன்னும் முழுமை பெறவில்லை Apple Intelligence-இன் முக்கிய அங்கமாக கருதப்பட்ட புதுப்பிக்கப்பட்ட Siri, இன்னும் முழுமையான ஏஐ அசிஸ்டென்ட் அனுபவத்தை வழங்கவில்லை என்பதே ஆப்பிள் எதிர்கொள்ளும் பெரிய சவாலாக உள்ளது. இயற்கையான உரையாடல் திறன் கான்டெக்ஸ்ட் புரிதல் ஆப்-டூ-ஆப் செயல்பாடுகள் போன்ற விஷயங்களில் Siri, போட்டியாளர்களை விட பின்தங்கியுள்ளதாக விமர்சனம் செய்யப்படுகிறது. 2026-ல் ஆப்பிளின் ‘மாஸ்டர் பிளான்’ என்ன? தொழில்நுட்ப வட்டார தகவல்களின் படி, 2026-ல்: முழுமையாக ஏஐ-ஆதரவு பெற்ற Siri ஐபோன்களில் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட Apple Intelligence அதிக சக்தி வாய்ந்த on-device AI processing தனியுரிமையை மையமாகக் கொண்ட ஏஐ அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம், AI போட்டியில் ஆப்பிள் தன் இழந்த முன்னிலையை மீட்டெடுக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. முடிவாக AI உலகில் தாமதமாக நுழைந்தாலும், “சரியான நேரத்தில், சரியான முறையில்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருவதே ஆப்பிளின் நீண்டகால யுக்தியாக இருக்கலாம். 2026-ல் அப்டேட் ஆகும் ஐபோன்கள், வெறும் ஹார்ட்வேர் அப்டேட் அல்ல முழுமையான AI அனுபவத்தை வழங்கும் சாதனங்களாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘நீதிமன்ற விசாரணை’ என்ற பெயரில் நடந்த மாபெரும் ஏமாற்று: முன்னாள் தலைமை நீதிபதி பெயரை பயன்படுத்தி மூதாட்டியிடம் ரூ.3.71 கோடி மோசடி

டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், அதையே ஆயுதமாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’, ‘ஆன்லைன் விசாரணை’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மூத்த குடிமக்களை மனதளவில் மிரட்டி, அவர்கள் வாழ்நாள் சேமிப்பை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. மும்பையில் நடந்த சமீபத்திய ஒரு சம்பவம், இந்த மோசடிகள் எந்த அளவுக்கு திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த முறை, சைபர் குற்றவாளிகள் முன்னாள் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரையே பயன்படுத்தி, ஒரு மூதாட்டியிடமிருந்து சுமார் 3 கோடியே 71 லட்சம் ரூபாயை மோசடியாகப் பறித்துள்ளனர். காவல்துறை மற்றும் சிபிஐ விசாரணை என்ற பெயரில் நடந்த இந்த நாடகத்தில், அந்தப் பெண் பல வாரங்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு, மனதளவில் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு தொலைபேசி அழைப்பில் தொடங்கிய பயம் மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் கடந்த 26 ஆண்டுகளாக வசித்து வரும் அந்த மூதாட்டிக்கு, கடந்த ஆகஸ்ட் 18 அன்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. “உங்கள் அழைப்பை கொலாபா காவல் நிலையத்துடன் இணைக்கிறேன்” என்று கூறிய அந்த நபர், அழைப்பைத் துண்டித்துள்ளார். சில நிமிடங்களில், அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை காவல் நிலைய அதிகாரி என்று அறிமுகப்படுத்தி, “உங்கள் ஆதார் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அது சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார். இந்த தகவலைக் கேட்ட அந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். தனக்கு அப்படி எந்தக் கணக்கும் இல்லை என்றும், தான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் அவர் விளக்கம் அளிக்க முயன்றுள்ளார். கைது மிரட்டலும் போலி ஆவணங்களும் அவரின் விளக்கத்தை கேட்காமல், மோசடி நபர்கள் “இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உங்கள் பெயரும் அதில் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கைது செய்யப்படலாம்” என்று மிரட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பான போலி கடிதங்களையும், சட்ட ஆவணங்களைப் போல வடிவமைக்கப்பட்ட சில பதிவுகளையும் அவருக்கு அனுப்பியுள்ளனர். “நாங்கள் விசாரணை நடத்துகிறோம். எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கைது செய்வோம்” என்று அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தை யாரிடமும் சொன்னால், அவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக, அந்த மூதாட்டி கடும் பயத்தில் ஆழ்ந்துள்ளார். தனது வங்கிக் கணக்குகள், முதலீடுகள், வீட்டுத் தகவல்கள் என அனைத்தையும் அவர்களிடம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார். ‘ஆன்லைன் நீதிமன்றம்’ என்ற நாடகம் ஒரு கட்டத்தில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும், 24 மணிநேரமும் அவர்களது கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். விசாரணை நடத்தும் அதிகாரியின் பெயர் எஸ்.கே. ஜெயஸ்வால் என்றும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், அந்தப் பெண்ணிடம் அவரது வாழ்க்கையைப் பற்றி 2 முதல் 3 பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதச் சொல்லியுள்ளனர். “இது உங்கள் நிரபராதத்தை நிரூபிக்க உதவும்” என்று கூறி, அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளனர். பின்னர் நடந்தது இன்னும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வீடியோ காலில் வந்த ஒருவர், தன்னை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்கள் வழக்கு தீவிரமானது. ஆனால் நீங்கள் நிரபராதி” என்று கூறி, அவரது முதலீட்டு ஆவணங்களை கேட்டுள்ளார். அந்தப் பெண், இது உண்மையான நீதிமன்ற விசாரணை என்றே நம்பியுள்ளார். கணக்குகளை காலி செய்யச் செய்த திட்டம் சிறிது நேரத்தில், “உங்கள் கணக்கில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது” என்று கூறி, விசாரணையின் ஒரு பகுதியாக அவரது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பணமாக்கச் சொன்னுள்ளனர். பின்னர், அந்த தொகையில் 90 முதல் 95 சதவீதத்தை அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு தற்காலிகமாக மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். கைது பயத்தில் இருந்த அந்த மூதாட்டி, அவர்கள் சொன்னபடி பணத்தை அனுப்பியுள்ளார். இதற்குப் பிறகு, தொடர்ந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு மிரட்டல்கள் வந்துள்ளன. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடந்த இந்த மோசடியில், மொத்தமாக 3 கோடியே 71 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைச் சொல்லி காலம் கடத்தினர். இதன் பின்னர்தான் தான் மோசடியில் சிக்கியிருப்பதை அந்தப் பெண் உணர்ந்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் – வெளிவந்த உண்மை அக்டோபர் 13 அன்று, அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாட்ஸ்ஆப் உரையாடல்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், ஸ்கிரீன் ஷாட்கள் ஆகியவற்றை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல்துறையோ, சிபிஐயோ ஒருபோதும் வாட்ஸ்ஆப், வீடியோ கால் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக விசாரணை நடத்துவதில்லை. கைது செய்வதாக மிரட்டுவதும் இல்லை. அப்படிப்பட்ட அழைப்புகள் வந்தால், எந்தத் தகவலையும் பகிராமல் உடனே அந்த எண்ணைத் துண்டித்து, பிளாக் செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளின் புகைப்படங்கள், நீதிமன்ற பின்னணி போன்றவை காண்பிக்கப்பட்டாலும், அதனால் நம்ப வேண்டாம். இது ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம். சைபர் மோசடியில் சிக்கினால், உடனடியாக அரசு நடத்தும் சைபர் குற்ற புகார் தளத்தில் அல்லது உள்ளூர் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். தாமதமின்றி புகார் அளித்தால், பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எடை குறைப்பு என்ற பெயரில் நடந்த விபரீதம்

எடை குறைப்பு என்ற பெயரில் நடந்த விபரீதம் – மதுரை மாணவியின் மரணம்; ஆயுஷ், மருந்து கட்டுப்பாட்டு துறை கடும் எச்சரிக்கை மதுரையில் இளம் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவும் தவறான உடல்நல ஆலோசனைகளின் ஆபத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. உடல் எடையை குறைக்க முயன்ற நிலையில், வெங்காரம் என்ற பொருளை உட்கொண்டதால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக மாணவி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   மதுரை செல்லூர் அருகே உள்ள மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த கலையரசி (19), அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். சிறுவயதிலிருந்தே உடல் பருமன் இருந்ததால், எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை அவர் தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.   அந்த வகையில், ஒரு வீடியோவில் கூறப்பட்ட ஆலோசனையை நம்பி, அருகிலுள்ள நாட்டு மருந்துக் கடையில் வாங்கிய வெங்காரத்தை கலையரசி உட்கொண்டுள்ளார். இதன் பின்னர், அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பிய நிலையில், அதே இரவு மீண்டும் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை.   இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சம்பவத்திற்கு காரணமான நாட்டு மருந்துக் கடை மற்றும் சமூக வலைதள சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.   இந்த விவகாரம் குறித்து ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பாரம்பரிய மருத்துவ குறிப்புகள், எடை குறைப்பு டிப்ஸ் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவரி, பதிவு விவரம் இல்லாத விளம்பரங்களை நம்புவது ஆபத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆயுஷ் துறை அதிகாரிகள் கூறுகையில், “சமூக வலைதளங்களில் போலி முகவரி, தொடர்பு விவரம் இல்லாத விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நடவடிக்கை எடுப்பது சவாலாக உள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை நம்பாமல், அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.   எடை குறைப்பு, ஆண்மை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவும் விளம்பரங்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான புரிதலை உருவாக்கக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கலையரசியின் மரணம், இந்த ஆபத்துகளை உணர்த்தும் ஒரு துயரமான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

வடபழனி முருகன் கோவிலில் நடிகர் ஜீவா சாமி தரிசனம்

ஜீவா நடிப்பில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியீடு சென்னை: நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் கதையும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜீவா, இதற்கு முன்பு ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் காமெடி, காதல், ஆக்‌ஷன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த புதிய படத்தில், சமூகப் பின்னணியுடன் கூடிய முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத்தில் அரசியல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாக கொண்டு கதை நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்கம், இசை மற்றும் நடிகர்களின் நடிப்பு படத்திற்கு முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதல் நாள் வசூல் மற்றும் ரசிகர் கருத்துகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Top week

அரசியல்

தொகுதிப் பங்கீடு தகராறு: திமுக–காங்கிரஸ் உறவில் பதற்றம்; அரசியல் பின்னணி என்ன?

Admin பிப்ரவரி 27, 2026 0