தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ‘விசில்’ சின்னத்தை பொதுச்சின்னமாக ஒதுக்கியுள்ளதாக Election Commission of India அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிப்பு
முதன்முறையாக தேர்தலை சந்திக்கவுள்ள தவெகவிற்கு, கடந்த ஜனவரி 22ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ‘விசில்’ சின்னம் பொதுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிடுவதற்காக விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை உள்ளிட்ட 10 சின்னங்களை விருப்பமாகக் கோரி மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், கட்சியின் விருப்பச் சின்னமான ‘விசில்’ ஒதுக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடியிருந்தனர்.
சர்ச்சைகளில் ‘விசில்’
‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்ட சில வாரங்களிலேயே, சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பல்வேறு தரப்புகளில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், திமுக கவுன்சிலர் ஒருவர் தூய்மைப்பணியாளரிடம் இருந்த விசிலை பறித்து குப்பையில் வீசிய சம்பவமும் பேசுபொருளானது.
புதுச்சேரியிலும் அதே சின்னம்
30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியிலும் தவெகவிற்கு ‘விசில்’ சின்னமே பொதுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரு இடங்களிலும் ஒரே சின்னத்தில் கட்சி களமிறங்க உள்ளது.
ஒரே தேர்தலுக்கான ஒதுக்கீடு?
முன்னதாக தேர்தல் ஆணையம், இந்த தேர்தலுக்காக மட்டுமே ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அடுத்தடுத்த தேர்தல்களில் சின்னம் மாற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், புதுச்சேரியிலும் ‘விசில்’ சின்னத்துடன் களமிறங்கும் தவெக, தனது முதல் தேர்தல் அனுபவத்தை எப்படி அமைத்துக் கொள்கிறது என்பதில் அரசியல் வட்டாரங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

